பொங்கலூர் அருகே கள்ளக்கிணர் புதூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான தாய் மற்றும் மகனை சாதியைச் சொல்லி திட்டி இரும்புத் தடியால் தாக்கி காயம் ஏற்படுத்தியவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம், பொங்கலூர் ஒன்றியம் மாதப்பூர் அருகே கள்ளக்கிணர் புதூர் பகுதியைச் சேர்ந்த ஆர்.வடிவேல் (வயது 38) வியாழனன்று திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:
மாதப்பூர் ஊராட்சி கள்ளக்கிணர் புதூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 30 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் நாங்கள் வசித்து வருகிறோம். எங்கள் உறவினர் முத்துக்குமார் குடியிருந்த குடிசை வீட்டின் ஓலைக் கீற்றுகளை மாற்றி சிமெண்ட் ஓடு போடுவதற்கு முயன்றார். அப்போது அந்த குடியிருப்புக்கு அருகாமையில் இருக்கும் தோட்டத்து உரிமையாளரான பழனிச்சாமி அவரிடம் வந்து தனது தோட்டத்து வண்டிப் பாதையில் குடிசை போடக் கூடாது என்று சொல்லி தகராறு செய்தார். பாதைக்கு இடையூறு இல்லாமல்தான் வேலை செய்வதாக சொல்லியும் அவர் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், எங்கள் மீது கோபமாகவும் இருந்தார். இது குறித்து பல்லடம் வட்டாட்சியரிடமும் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த மார்ச் 1ஆம் தேதி வடிவேலுவின் அம்மா நாகம்மாள் பக்கத்தில் இருக்கும் வேறொருவர் தோட்டத்துக்கு வேலைக்குச் சென்றுவிட்டு மேற்படி வண்டிப் பாதையில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது பழனிச்சாமியும், அவரது மனைவி தமயந்தியும் சேர்ந்து வழிமறித்து சாதியைச் சொல்லி திட்டி இந்த வழியாக வரக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். அத்துடன் மறுநாள் மார்ச் 2ஆம் தேதி சுப்பிரமணி என்பவரின் தோட்டத்துக்குச் சென்று நாகம்மாள் வேலை செய்து கொண்டிருந்தார். காலை 10 மணியளவில் பழனிச்சாமியும், தமயந்தியும் அங்கு வந்து நாகம்மாளை சாதியைச் சொல்லி இழிவாகத் திட்டியதுடன் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்து, முதுகில் குத்தி கடுமையாகத் தாக்கினர். பக்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த தெய்வாத்தாள், சின்னக் குப்பாள் ஆகியோர் அவர்களைத் தடுத்து நாகம்மாளை காப்பாற்றினர்.
இந்த தாக்குதல் காரணமாக வலி தாங்காமல் நாகம்மாள் அழுது கொண்டிருந்தார். இது பற்றி வீட்டிற்குச் சென்ற பின் வடிவேலுவிடம் கூறியிருக்கிறார். எனவே வடிவேலு, தனது மனைவி லோகமணி, மகள் காவியாஸ்ரீயுடன் பழனிச்சாமி தோட்டத்துக்குச் சென்று அவரிடம் நியாயம் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்து பழனிச்சாமி வடிவேலுவையும் அடித்ததுடன், இரும்புக் குழாய் மூலம் தலையில் தாக்கினார். இதில் இடது காது கிழிந்து ரத்தம் கொட்டி வடிவேலு மயங்கி விழுந்தார்.
உடனடியாக உறவினர்கள் உதவியுடன் பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் பல்லடம் காவல் துறையினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடிவேலுவிடம் வந்து நீதான் பழனிச்சாமியை தாக்கியவரா என்று கேட்டு விசாரித்திருக்கின்றனர். ஆனால் அடிபட்டு மருத்துவ சிகிச்சை பெறுவது பற்றி எதுவும் விசாரிக்கவில்லை.
வடிவேலுவையும், அவரது அம்மாவையும் தாக்கிய பழனிச்சாமி பல்லடம் காவல் நிலையத்தில் தன்னை அவர்கள் தாக்கிவிட்டதாக பொய்புகார் கொடுத்துவிட்டு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவது போல் ஏற்பாடு செய்து கொண்டார். அத்துடன் பல்லடம் காவல் நிலையத்தில் வடிவேல் உறவினர்கள் புகார் தரச் சென்றபோது வடிவேலு நேரில் வந்தால்தான் புகார் மனுவைப் பெறுவோம் என்றும் கூறிவிட்டு புகார் மனுவை பெற மறுத்துவிட்டனர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் பல்லடம் காவல் நிலையத்தில் நேரில் சென்று வலியுறுத்திய பிறகு வடிவேலு கொடுத்த புகார் மனுவை பெற்று வழக்குப் பதிவு செய்தனர். எனினும் பழனிச்சாமி அளித்த பொய் புகார் அடிப்படையில் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும், அத்துடன் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்ட திருத்தம் 2015இன்படி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், அந்த சட்டப்படி வழக்கு விபரங்களை அவ்வப்போது தெரிவிக்க வேண்டும் என்று காவல் கண்காணிப்பாளருக்கு அளித்த மனுவில் வடிவேலு கேட்டுக் கொண்டிருக்கிறார்.