tamilnadu

img

தேசத்தை நிலைகுலைத்தது மோடியின் ‘நிலையான ஆட்சி’

திருப்பூர், ஏப். 11 –மோடியின் ஐந்தாண்டு கால ‘நிலையான ஆட்சி’ நாட்டின் பொருளா தாரத்தை, மக்களின் வாழ்க்கையை, சமூகத்தின் நல்லிணக்க கலாச்சாரத்தை, தேசத்தின் பாதுகாப்பை நிலைகுலையச் செய்துவிட்டது. எனவே ‘நிலையான ஆட்சிக்கு’ வாக்களியுங்கள் என்ற மோடியின் ஏமாற்றுத்தனத்தை நிராகரித்து, அவரது ஆட்சியைத் தோற் கடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அழைப்பு விடுத்தார்.மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து சூலூர், பல்லடம் ஆகிய இடங்களிலும் திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பரா யனை ஆதரித்து திருப்பூரிலும் புதன்கிழமை தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டங் களில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய சீத்தாராம் யெச்சூரி கூறிய தாவது: செவ்வாயன்று கோவைக்கு வந்து பிரச்சாரம் செய்த மோடி இளந்தலை முறை வாக்காளர்கள் ‘நிலையான ஆட்சி’அமைக்க தனக்கு வாக்களிக்கும்படி கேட்டிருக்கிறார். ‘நிலையான ஆட்சி’ என்றால் என்ன? ஒரு அரசாங்கம் ஐந்தாண்டுகள் நிலையாக இருப்பது மட்டும் நிலையான ஆட்சியில்லை. மக்கள் வாழ்க்கை, நாட்டின் பொரு ளாதாரம், தேசப் பாதுகாப்பு, சமூகநல்லிணக்கம் போன்றவை நிலையான தாக இருக்க வேண்டும்.5 ஆண்டுகளாக மோடியின் ஆட்சி நிலையானதாகத்தானே இருந்தது? அப்போது அவர் என்ன செய்தார்?மக்களின் பொதுப் பணத்தை, வங்கியில் இருந்த பணத்தை மோடியின் நண்பர்களான பெருமுதலாளிகளுக்குக் கடனாக கொடுத்தது மட்டும் 13 லட்சம் கோடி ரூபாய். 6 பெரிய விமான நிலையங்களை மோடியின் நண்பர் அதானிக்கு காண்ட்ராக்ட் கொடுத்திருக்கிறார். ரபேல் ஊழல் வரலாறு காணாதது. ஊழலுக்குரிய ஆதாரம் இருப்பதால்மோடி அரசின் ஆட்சேபணையை நிராகரித்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது உச்சநீதிமன்றம்.


மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 73 சதவிகிதத்தை ஒரு சதவிகிதம் மட்டுமே இருக்கும் பெரிய முதலாளி கள் அபகரித்திருக்கிறார்கள். ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கத்தின் மூலம் கோடிக்கணக்கான இந்திய மக்கள், சிறு,குறு, நடுத்தர தொழில், வணிக நிறுவனங்கள் சீர்குலைக்கப்பட்டன. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் மோடி ஆட்சியில் அதிகரித்திருக்கிறது. இதனால் மக்கள் தொகையில் 52 சதவிகிதமாக இருக்கும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, நல்ல கல்வி, சுகாதாரம் கிடைக்காமல், விரக்திஅடைந்தவர்களாக மாற்றப்பட்டுள்ள னர். இப்படியாக நாட்டின் பொருளா தாரத்தை, மக்களின் வாழ்க்கையை நிலைகுலையச் செய்த மோடியின் ‘நிலையான ஆட்சி’ தேவையா?


பாகிஸ்தானின் கூட்டாளி யார்?


அடிப்படையான பிரச்சனைகளில் தோல்வி அடைந்த நிலையில், தான் ஒரு காவலாளி (சௌகிதார்) எனச் சொல்லிக் கொள்ளும் மோடி தன்னைப்பார்த்து பாகிஸ்தான் பயப்படுவ தாகவும், ஆனால் எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறு கிறார். நேற்று பாகிஸ்தான் தொலைக்காட்சியில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான், இந்தியாவில் மோடி ஆட்சி வருவதுதான் தங்களுக்கு நல்லது என்று சொல்லி இருக்கிறார். அதாவது மோடி இங்கு ஆட்சியில் இருந்தால்தான் பாகிஸ்தானில் இஸ்லா மிய அடிப்படைவாதிகள் பலமடைய முடியும், இதன் மூலம் இருதரப்பினரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் வளர்த்துக் கொள்ள முடியும் என்று அர்த்தம். இதில் இருந்தே யார் பாகிஸ்தானின் நண்பர் என்பது தெரிகிறதல்லவா! இந்த காவலாளி முதலில் நிலத்துக்கு நான் பாதுகாவலன் என்றார், அடுத்து விமானப்படை தாக்குதல் நடத்தியதால் ஆகாயத்திற்கும் நான் பாதுகாவலன் என்றார். இந்திய விஞ்ஞானிகள் செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்தியவுடன், இப்போது இந்த காவலாளி நான் விண்வெளிக்கும் பாதுகாவலன் என்கிறார். நல்லது, மோடி அவர்களே நீங்கள் விண்வெளியின் காவலாளியாக அங்கேயே இருந்து கொள்ளுங்கள், நாங்கள் இந்தியாவை நல்லபடியாக பாதுகாத்துக் கொள்கிறோம்.இவ்வாறு யெச்சூரி பேசினார்.அவரது ஆங்கில உரையை தீக்கதிர்மதுரைப் பதிப்பு பொறுப்பாசிரியர், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பி.ராஜேந்திரன் தமிழில் மொழி பெயர்த்துக் கூறினார்.  (ந.நி.)மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து திருப்பூரில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். மேடையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள்.


;