ஆம்பூர், ஜன.16 - திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த அம்மணாங்கோயில் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (35). இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ஜெயஸ்ரீ(5), தானுஸ்ரீ (3) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள். பொங்கல் பண்டிகையையொட்டி வீட்டில் சமைத்த பொங்கல் பிரசாதங்களை சாப்பிட்ட இரண்டு குழந்தைகளும் சில நிமிடங்களில் வாந்தி எடுத்தாக கூறப்படுகிறது. உடனடியாக இரு குழந்தைகளையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை மேற்கொண்டார். இரண்டு குழந்தைகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.