திருநெல்வேலி, மே 14-பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதையடுத்து சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக நீர்நிலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு உள்ளிட்ட இடங்களில் ஏராளமான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் திரண்டனர்.வேலூர், திருவண்ணாமலை, சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் திங்களன்று அதிகாலைமுதலே பேருந்து, வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் பாபநாசத்தில் குவியத் தொடங்கினர். இதனால் பாபநாசம் வன சோதனைச் சாவடியில் காலை 8 மணியிலிருந்தே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, வனத் துறையினர் பகுதி பகுதியாக வாகனங்களை அனுமதித்தனர். மேலும், அகஸ்தியர் அருவியிலும் கூட்டம்அதிகமானதையடுத்து வாகனங்கள் சொரிமுத்துஅய்யனார் கோயிலுக்குத் திருப்பி விடப்பட்டன. இதையடுத்து சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதியில் தாமிரபரணியில் பொதுமக்கள் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும், பாபநாசம் கோயில் அருகேயுள்ள ஆற்றிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது.அகஸ்தியர் அருவி செல்லும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் வனத்துறையினர் அருவிக்குச் செல்லும் மலைச் சாலையை சீரமைத்து இரண்டு வாகனங்கள் செல்லும் வகையில் பாதை அமைத்தால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம்.