எடப்பாடி பழனிசாமி அரசின் காவல்துறை நமக்கு வழங்கியுள்ள கோலப் போராட்ட வடிவத்திற்கு ஒரு பாரம்பரியம் உண்டு. 1945-46 ஆண்டுகளில் நாடு தழுவிய வீரம் செறிந்த ரயில்வே தொழிலாளிகளின் போராட்டம் திருச்சியின் தியாக பூமி பொன்மலை யிலும் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருந்தது. அதில் ஒரு நூதன வடிவமாக கோலம் மூலமாக வெள்ளைய ஆட்சி யையும் ரெயில்வே நிர்வாகத்தின் சுரண்டலையும் காவல்துறை அராஜகங்களையும் அம்பலப்படுத்த தோழர்கள் பாப்பா உமாநாத் மற்றும் அனைத்து தோழர்களாலும் ‘அத்தை’ என்று அன்பாக அழைக்கப்பட்ட பங்காரு அம்மாள் ஆகியோர் முடிவு செய்தனர். பொன்மலை ரெயில்வே காலனி முழுவதும் இப்படிபட்ட கோலங்களை போட்டு வலுவான பிரச்சாரம் மேற்கொண்டதை தோழர் பாப்பா சொல்லி திருச்சி தோழர்கள் பலரும் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். மாதர் சங்க கூட்டங்களில் காவல்துறை தரும் நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்வது என்று தோழர்களை பயிற்று விக்கும் முகமாக பலமுறை அருமை தோழர் பாப்பா உமாநாத் இத்தகவலை பகிர்ந்திருக்கிறார். கம்யூனிஸ்ட்டுகள் அன்றைக்கே நடத்திய கோலப் போராட்டத்தை காலம் மீண்டும் கொண்டு சேர்த்துள்ளது.
- பேரா. சந்திரா