தஞ்சாவூர் மே 26-விசைப்படகுகளுக்கு பராமரிப்பு தொகை வழங்க வேண்டும். மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15–ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 15–ஆம் தேதி வரை மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டும் 60 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளது. இந்த காலகட்டத்தில் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை மீனவர்கள் ஆழ்கடலுக்கு விசைப்படகில் சென்று மீன் பிடிக்கக் கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. தடைக்காலம் முடியும் வரை விலை உயர்ந்த மீன்களான நெய் மீன், நகரை, பாறை, விலைமீன் போன்றவை கிடைக்காது. வள்ளம், கட்டுமரம் மூலம் மீன்பிடிக்கும் பணி வழக்கம் போல் நடைபெறும் என்பதால் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் மட்டுமே மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும். இதனால், மீன்கள் விலையும் உயர்ந்து உள்ளது. இந்த தடை காலத்தில் விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளை படகு கட்டும் தளத்தில் கரையேற்றி பழுது பார்க்கும் பணியை மேற்கொள்வார்கள். படகுகளுக்கு வர்ணம் பூசும் பணியும் நடைபெறும். வலைகள் பழுது பார்க்கும் பணியிலும் மீனவர்கள் ஈடுபடுவார்கள்.
இதில் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் பகுதியில் 246 விசைப்படகுகள் இருந்தன. கடந்தாண்டு வீசிய கஜா புயலில் 188 படகுகள் முழுமையாகவும், 58 படகுகள் பகுதியாகவும் சேதமடைந்தன. பகுதி சேதமடைந்த 58 படகுகளுக்கு ரூ.3 லட்சமும், முழுமையாக சேதமடைந்த சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 54 படகுகளுக்கு ரூ.5 லட்சமும் அரசு நிவாரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன் வழங்கப்பட்டது. அதே நேரம் 6 மாதங்களை கடந்தும் மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் பகுதியில் உள்ள 134 படகுகளுக்கு இதுவரை அரசு நிவாரணம் வழங்காததால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த தடைக் காலத்தில் இப்பகுதியில் உள்ள குறைந்தளவு விசைப்படகுகளில் மராமத்து பார்க்கும் பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், படகுகளை பழுதுநீக்கம் செய்வதற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை செலவழிக்கப்படுவதாக மீனவர்கள் கூறுகின்றனர். விசைப்படகு மீனவர் மல்லிப்பட்டினம் எஸ்.எஸ்.சேக் தாவூத் கூறுகையில், கடலில் மீன் வளத்தை காக்கும் பொருட்டு 45 நாட்கள் இருந்த தடைக்காலத்தை கடந்த ஆண்டு முதல் 60 நாட்களாக மாற்றி அரசு அறிவித்துள்ளது. இதனால் 2 மாத காலம் மீனவர்கள் வேலை இழக்கும் நிலை உள்ளது.
இதனால் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் பகுதி மீனவர்கள் படகுகளின் இயந்திரத்தை பழுதுநீக்கி சரிசெய்யும் பணியிலும், வலைகளை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். 60 நாட்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைப்பதால் முழுமையாக மராமத்து பணிகள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. சாதாரணமாக ஒரு விசைப்படகை கரையில் ஏற்றி சுத்தம் செய்து சில்லரை வேலைகள் பார்த்து, வர்ணம் பூசி கடலுக்கு செல்வதற்கு மட்டும் குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை செலவாகிறது. கஜா புயலில் சேதமடைந்து அரைகுறையாக வேலை பார்த்து கடலுக்கு சென்று வந்த படகுகள் எல்லாம் தற்பொழுது முழுமையாக மராமத்து பணிகள் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. புதிய படகின் விலை ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை உள்ளது. தற்போது விலைவாசிகளுக்கேற்ப தினக்கூலி ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2, 500 வரை உள்ளது. பலகை 1 கன அடி 400 முதல் 600 ரூபாயாகவும், இணைப்புக்கட்டை 1,500 முதல் 2,000 ரூபாயாகவும் உள்ளது. மட்டி அடித்து பைபர் தடவுவதற்கு 2 லட்சம் ரூபாயும் வர்ணம் பூச 50 ஆயிரம் ரூபாயும் தேவைப்படுகிறது. முழுமையாக படகுகளை மராமத்து பார்ப்பதற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை தேவைப்படுகிறது. நலிந்து வரும் மீன்பிடி தொழிலை பாதுகாக்க தடைவிதி காலங்களில் மராமத்து பணிகளுக்காக அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்" என்றார். மேலும் தடைக்காலத்தில் அரசு வழங்கும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மீன்பிடித் தடைக்காலத்தில் படகுகளை பராமரிப்பதற்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.