tamilnadu

img

தஞ்சையில் கடும் சூறாவளிக் காற்று நாட்டு, விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை

தஞ்சாவூர், ஜூலை 5-  தஞ்சாவூர் மாவட்ட கடலோரப் பகுதியில் கடும் சூறாவளிக் காற்றால், ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சின்னமனை, சேதுபாவா சத்திரம், கழுமங்குடா, காரங்குடா, சம்பைப்பட்டினம், மந்திரிப்பட்டினம், அண்ணாநகர், புதுத்தெரு, செம்பியன் மாதேவிபட்டினம், கணேசபுரம் உட்பட 32-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 4,500 நாட்டுப்படகுகள் உள்ளன. விசைப்படகுகள் கடலுக்கு செல்லும் திங்கள், புதன், சனிக்கிழமைகளை தவிர்த்து, மற்ற தினங்களில், நாட்டுப் படகுகள், கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். அதேசமயம் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக சேதுபாவாசத்திரம் கடல் பகுதியில் கடுமையான சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. அதே சமயம் புதன்கிழமை மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 25 விசைப்படகுகள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. ஆனால் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், மீன்பிடி தொழில் செய்யாமல் அன்று மாலையே கரை திரும்பி விட்டனர். இதனால் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் கரைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதிகளில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர்.