tamilnadu

ஆளுமை மிக்க அரசியல் கலைஞன் தோழர் க.செல்வராஜூக்கு தமுஎகச செவ்வணக்கம்

மக்கள் நாடகக் கலைஞரும் மருத்து வருமான தோழர் க.செல்வராஜ் மறைவு மிகுந்த அதிர்ச்சிய ளிக்கக் கூடியதாகும். 64 வயதில் மார டைப்பால் மரணமடைந்த அவரது இழப்பு நாடகக் கலை உலகுக்குப் பேரிழப்பா கும். திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளை யத்தில் பிறந்து, பள்ளிக்  கல்வியை அங்கு முடித்து, மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயில்கிற காலத்தில் இந்திய மாணவர் சங்க இயக்கத்தின் மாபெரும் போராளியாகத் திகழ்ந்தார். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும், மதுரை மாவட்டச் செயலாளராகவும் செயலாற்றி னார். அப்போது மருத்துவக் கல்லூரிக ளைத் தனியார் மயமாக்கும் போக்கினைத் தமிழக அரசு ஆரம்பித்த போது, தமிழ கமெங்கும் கிளர்ந்தெழுந்த மாபெரும் மாணவர் போராட்டத்தின் தளபதியாக விளங்கினார். அந்த நேரத்திலும் நாடகம், கவிதை, பட்டிமன்றம், பேச்சு எனத் தன் கலை உலகப் பயணத்தையும் இணையா கத் தொடர்ந்தார். இதே காலட்டத்தில் மதுரை மாவட்டத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் மாவட்டக்குழுவிலும் இணைந்து பணியாற்றினார். 1989 ஜனவரி முதல் நாளில் தில்லி காசியாபாத் வீதிகளில் மாபெரும் இடது சாரி அரசியல் நாடகக் கலைஞன் சப்தர் ஹஷ்மி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடெங்கும் அரசியல் நாடகம் குறித்த விழிப்புணர்வு தோன்றியது. தமிழகத்திலும் பல நாடகக் குழுக்கள் தோன்றின. தோழர் செல்வராஜ் தம்மை அந்தக் கணம் முதல் ஒரு இடதுசாரி அரசியல் நாடகக் கலைஞனாக உணர்ந்து செயலாற்றத் தொடங்கினார்.  சப்தர் ஹஷ்மியின் பெயராலேயே ஒரு  கலைக்குழுவைத் தொடங்கினார். 1990 ல் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஐந்தாவது மாநில மாநாட்டில் மதுரை சப்தர் ஹஷ்மி கலைக்குழுவின் சார்பில் தன்னுடைய முதல் நாடகமான ‘குப்பைகள்’ நாடகத்தை அரங்கேற்றினார். நசிவு இலக்கியங்கள் பற்றிய இந்த நாடகம் பலரது பாராட்டையும் பெற்றது. தமிழகம் முழுக்கப் பல முறை மேடை யேறியது. இதே காலகட்டத்தில் தமிழகத்தில் நடந்த மாபெரும் மக்கள் இயக்கமான அறி வொளி இயக்கத்தில் இணைந்து, மதுரை வைகை அணையில் நடந்த கலைஞர்கள் பயிற்சி முகாமில் தலைமைப் பயிற்சியா ளராகச் செயல்பட்டு, பல நூறு அறி வொளிக் கலைஞர்களை உருவாக்கினார். அவரிடம் அன்று பயிற்சி பெற்ற பல நாடகக் கலைஞர்களும் இன்றைக்கும், நாடகம், திரைத்துறை, சின்னத் திரை என்று பல தளங்களில் மாபெரும் கலை ஞர்களாகத் திகழ்கிறார்கள். மிக எளிய உழைக்கும் வர்க்கப் பகுதி யிலிருந்து திரட்டப்பட்ட ஆர்வமுள்ள இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து உருவானதுதான் அவரது சப்தர் ஹஷ்மி கலைக்குழு.  வாடகை வீடு, கொசுவே கொசுவே, கல்கி வருகிறார், நரிக் கொம்பு, ஆதலினால் காதல், வேதாளர் சொன்ன கதை, மந்தையன் நேற்றுச் செத்துப் போனான் முதலிய அவரது இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்கள் 1990களில் இருந்து இந்தியா, தமிழகத்தில் நடந்த அரசியல் வரலாற்றினை ஓர் இடதுசாரிக் கலைஞன் எதிர்கொண்ட விதத்தைப் பேசுபவை. அவரது பயிற்சியில் உருவான கலை ஞர்களால் உருவானவைதான், கரு மாத்தூர் கலைக்குழு, சுடர் கலைக்குழு, போக்குவரத்து கலைவாணர் கலைக்குழு, கார்மேகம் கலைக்குழு ஆகிய மக்கள் நாடகக் குழுக்கள். நரிக்கொம்பு என்கிற நாடக நூலும், மௌனமொழி என்கிற கவிதை நூலும், விடுதலைப் போரும் தமிழ் நாடகக் காரர்க ளும் என்கிற நாடக வரலாற்று நூலும் இலக்கிய உலகுக்கு அவரது கொடை யாகும். பல்வேறு நோய்களால் உடல் நலிவுற்று வீட்டிலிருக்க நேர்ந்த போதும், நூல் வாசிப்பு, கவிதை, நாடகம் என்று தன் வீட்டை எப்போதும் இளைஞர்களும், கலைஞர்களும், எழுத்தாளர்களும் புடை சூழ வைத்திருந்தார். சப்தர் ஹஷ்மி கலைக்குழுவின் கலைஞர்கள் வாழ்க்கை நிமித்தம் பல்வேறு சூழல்களில் பிரிய நேர்ந்த போது, தொடர்ந்து புதிய இளை ஞர்களை இணைத்து மதுரை நாடக இயக்கம் என்ற பெயரில் ஓர் இயக்கத்தைத் தொடங்கி இயங்கினார். பல்வேறு இடதுசாரி இயக்க நாடக மேடைகளில் தோழர் செல்வராஜின் நாட கங்கள் தமிழகமெங்கும் வலம் வந்தன. தமுஎகச, மதுரை மாநகர் மாவட்டக் குழு உறுப்பினராக, தமுஎகச மதுரை நரிமேடு கிளைத் தலைவராக என்று தன் பொறுப்புகளையும் இறுதிவரை உறுதியோடு நிறைவேற்றினார்.  கடைசியாய் சென்னையில் தமுஎகச நடத்திய தென்மண்டல நாடகவிழாவுக்குத் தனது பங்களிப்பாக, மதுரை கூடல் அரங்கம் சார்பில் “மந்தையன் நேற்றுச் செத்துப்போனான்” என்கிற நாடகத்தை எழுதி இயக்கி, கலைஞர்களுக்குப் பயிற்சியளித்து சென்னை அனுப்பி வைத்தார். மதுரையில் ஒரு மக்கள் நாடக விழாவை நடத்த வேண்டும் என்று  தன்னுடைய அவாவை வெளிப்படுத்தி னார். செல்வராஜ் மாணவர் இயக்கத்  தலைவராக இருந்த காலத்தில் சாதிய வெறிச் சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர்கள் சோமு, செம்பு பற்றிய நாவல் ஒன்றை எழுதும் முயற்சி யில் இருந்தார். அது போலவே மேல வளவு படுகொலை பற்றிய நாவல் ஒன்றும் எழுத முனைந்தார்.  மேலும் கே.பி.ஜானகியம்மாள் வாழ்க்கை வரலாற்று நாடகம் ஒன்றையும், 1857 சிப்பாய்ப் புரட்சி பற்றிய முழு நீள நாடகம் ஒன்றை யும் உருவாக்கும் முயற்சியில் அதற்காக ஆய்வுகள் செய்தார். உடலால் நலிந்த போதும், இறக்கும் வரை நாடகம், இலக்கியம், கலை என்று தன் வாழ்வை ஆளுமை மிக்க அரசியல் கலைஞனாகச் செயல்பட்ட தோழர் க.செல்வராஜ் மறைவுக்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநி லக்குழு தன் சிரந்தாழ்ந்த செவ்வணக் கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.  தோழர் க.செல்வராஜை இழந்து வாடும் அவரது துணைவியார் பேராசிரி யர் முனைவர் சாந்தி, மகள் இசை ஆகியோருக்கும், அவரது குடும்பத்தா ருக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கி றது.  தமுஎகச மாநிலத்தலைவர்  சு.வெங்கடேசன் எம்.பி.,  பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தி.