தருமபுரி, மே 28-தொடர்ந்து பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கொசு ஒழிப்பு களப் பணியாளர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியுடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்ட கொசு ஒழிப்பு களப் பணியாளர்கள் நலச் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் கொசு ஒழிப்புப் பணி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஊராட்சி ஒன்றியங்களில் மாதம் 20 பேர் பணியாற்றி வருகிறோம். கிராமங்களில் வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் விழிப்புணர்வையும் பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகிறோம்.எங்களுக்கு தினக்கூலியாக ரூ.236 வழங்கப்பட்டு வருகிறது. இதில், பேருந்து கட்டணமாக ரூ.75 செலவாகிறது. எனவே, எங்களுக்கு தினக் கூலியாக ரூ.500 வழங்க வேண்டும். பழைய பணியாளர்களை நிறுத்திவிட்டு, புதிய பணியாளர்களை நியமிக்கக் கூடாது. எங்களுக்கு தொடர்ந்து பணி வழங்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.