tamilnadu

img

தொடர் வறட்சியால் குடிநீர் இல்லாமல் தத்தளிக்கும் தருமபுரி மக்கள்

தருமபுரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்துப்போனதால் தொடர் வறட்சி நிலவுகிறது. நீர்நிலைகளை மேம்படுத்தாத அதிமுக அரசால் தற்போது மாவட்டம் முழுவதும் குடிநீர் இல்லாமல் மக்கள் தத்தளிக்கும் நிலமை ஏற்பட்டுள்ளது.தருமபுரி மாவட்டத்தில் பெய்த மழையளவு சராசரிக்கும் கீழே உள்ளது. மாவட்டத்தின் ஆண்டு சராசரிமழையளவு 813 மி.மீ. ஆகும். இதில்,கடந்த2013 ஆம் ஆண்டு 804 மி.மீ.,2014 ஆம் ஆண்டு 778.4 மி.மீ., 2015ஆம் ஆண்டு சராசரிக்கும் அதிகமாக 1,101மி.மீ., 2016 ஆம் ஆண்டு446.8, 2017ஆம் ஆண்டு 894.7 பதிவானது. ஆனால், நிகழாண்டு தற்போது வரை 249.6 மி.மீ. மட்டுமே பதிவாகியுள்ளது. இது ஆண்டு சராசரியைக் காட்டிலும் மிக, மிக குறைவாகும். இதனால்,கோடை தொடங்கியுள்ள நிலையில் கடும் குடிநீர்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


வறண்ட நீர்நிலைகள்

தருமபுரி மாவட்டத்தில் பஞ்சப்பள்ளி சின்னாறு, தொப்பையாறு, நாகவதி, கேசரிகுளி, வாணியாறு, தும்பலஅள்ளி என 8 அணைகள் மற்றும் 83பொதுப் பணித் துறை ஏரிகள் உள்ளன.இவை தவிர, ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் 596 சிறியதும், பெரியதுமான ஏரிகள் உள்ளன. மழைபொய்த்து போனதால் வறண்டுள்ளது. இதனால் கிராமங்களில் குடிநீருக்காக போடப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லை.


ஒகேனக்கல் குடிநீர் திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடிநீரில் புளோரோசிஸ் என்ற நச்சு கலந்திருப்பதால் மக்கள் உடல்ரீதியாக பல்வேறு நோய் பாதிப்புக்குள்ளானார்கள். மக்கள் உடல் நலம்பாதுகாக்கப்படும் வகையில் ஜப்பான் நாட்டு நிதி உதவியிடன் கடந்த 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதியன்று திமுக ஆட்சியில் மறைந்தமுன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் துவக்கப்பட்டது. கிருஷ்ணகிரி உள்ளடக்கி ஒன்றுபட்ட தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தால் 3 நகராட்சிகள், 16 நகர்ப்புற பஞ்சாயத்துகள், 1,785 கிராமபஞ்சாயத்துகளின் கீழ் வசிக்கும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டது.தற்போது ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தால் தருமபுரி மாவட்டத்தில் 50 சதவிகிதமான கிராமங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பல கிராமங்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 15 நாட்களுக்கு ஒருநாள் மட்டுமே ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு புளோரோசிஸ் நச்சுவிலிருந்து காப்பாற்ற ஒகேனக்கல் குடிநீர் வழங்கிவந்த நிலையில் பல கிராமங்களில் ஆழ்துளை மூலம் கிடைக்கும் தண்ணீரை ஒகேனக்கல் குடிநீருடன் கலந்து விநியோகிக்கப்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளான பிக்கிலி, அலக்கட்டு, வத்தல்மலை, சித்தேரி, சிட்லிங் ஆகிய பகுதிகளில்ஒகேனக்கல் குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை. மேலும், அதன் பிறகுஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் குடிநீரை கொண்டுசெல்ல கட்டமைப்பை ஏற்படுத்தவில்லை


குடிநீரை விலைக்கு வாங்கும் அவலம்

மாவட்டத்தில் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருவதால் ஒரு டிராக்டர் தண்ணீர் ரூ.600 முதல் ரூ.1000 வரை விற்கப்படுகிறது. இதைவாங்கி பயன்படுத்தி வருகின்றனர். விலைகொடுத்து வாங்க முடியாத ஏழை மக்கள் விவசாய கிணறுகள் தேடி பல கிலோமீட்டர் நடந்து சிலமணி நேரத்தை செலவிடுகின்றனர்.


போராடும் மக்களை மிரட்டும் காவல்துறை

பல கிராமங்களில் குடிநீர் இல்லைஇதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், பிடிஓவிடமும் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஊராட்சி அளவில்நடைபெறும் அம்மா குறைதீர்க்கும் நாள் முகாம் ஆகிய இடங்களில் அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதபட்சத்தில் ஆவேசம் அடைந்த அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல், பேருந்தைசிறைபிடித்து மறியல் என பலவழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குடிநீர் பிரச்சனையை தீர்க்காதஅதிமுக அரசு காவல்துறையை கொண்டு போராடும் மக்களை, அமைப்பினரை வழக்கு போட்டுவிடுவோம் என மிரட்டி வருகிறது. பல கிராமத்தில் குடிநீர் கேட்டு போராடியர்கள் மீது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்குபதியப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசு குடிநீர் மேம்பாட்டுக்காக எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. வெற்று வாக்குறுதி கொடுக்கும் அதிமுக அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது.தற்போது நாடாளுமன்ற தேர்தல் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கும் இச்சூழலில் தருமபுரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், மலைக்கிராமங்களுக்கு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வாக்குறுதி மக்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுகவேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார், சட்டமன்ற இடைத்தேர்தல் அரூர்,(தனி) தொகுதி திமுக வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார், பாப்பிரெட்டிபட்டி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி ஆகியோர் வெற்றி பெறுவது மக்களால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

-ஜி.லெனின்.

;