tamilnadu

img

தமிழ்க் கவியை அவமதிப்பதா?

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன் மற்றும் க. உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை: கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம். இந்த நிகழ்ச்சிக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருவதாக இருந்தது. ஆனால் திடீரென தனது வருகையை ரத்து செய்தார் அவர்.

இதன் பின்னணியில் தமிழக பாஜக இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. ஆண்டாள் பற்றிய தனது கட்டுரையில் ஓர் ஆய்வு முடிவினை மேற்கோள் காட்டியதற்
காக அன்று அவர் மீது பாய்ந்தனர் பாஜக தலைவர்கள். சனாதன நோக்கிலிருந்தும், மதவெறி போக்கிலிருந்தும் அவர்கள் அந்தத் தாக்குதலைத் தொடுத்தனர். அது கருத்துரிமை மீதும், ஆய்வுரிமை மீதும் வீசப்பட்ட வெட்டரிவாளாக இருந்தது.
 

அதன் தொடர்ச்சியாகவே டாக்டர் பட்டம் வழங்கும் விழாவிற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் வரக்கூடாது என்று வம்பு செய்து அவரைத் தடுத்திருக்கிறார்கள். அவரும் அதற்குப் பணிந்து தனது பங்கேற்பை ரத்து செய்திருக்கிறார். இந்திய நாட்டின் மத்திய அமைச்சர் ஒரு கட்சிக்காரராக மாறி நமது தமிழ்க்கவியை அவமானப்படுத்த முனைந்திருக்கிறார்.

நம் தமிழ்க்கவி வைரமுத்துவுக்கு  மத்திய அமைச்சரும் தமிழக பாஜகவும் செய்துள்ள இந்த அநீதி ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கு செய்யப்பட்டுள்ள அநீதியாகும். பழமைவாத மற்றும் வகுப்புவாத நோக்கிலிருந்து இழைக்கப்பட்டுள்ள இந்த அநியாயத்தை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது. பாஜகவானது தமிழ் இலக்கியவாதிகளுக்கும் அவர்தம் சுதந்திரச் சிந்தனைக்கும் எதிரானது என்பதை மேடை சுட்டிக்காட்டுகிறது. நமது விமர்சனப் பூர்வ ஆய்வு மரபைக் கட்டிக் காப்பதற்காக பாஜகவின் மதவெறிப் போக்கை எதிர்த்துப் போராட முன்வருமாறு அனைத்து மனிதநேயர்களையும் அது அறைகூவி  அழைக்கிறது.

;