tamilnadu

img

வேளாண் நிலம் : மழைநீர் சேகரிப்பில் புதிய வெற்றி கதை.... பேரா. தி.ராஜ்பிரவின்

மேற்குவங்கத்தில் கிராமப்புறங்களில் தண்ணீர் பஞ்சம் காரணமாக விவசாயிகள் பசி மற்றும் வறுமையில் வாடி வந்தனர். இத்தகைய நிலையில் கடந்த நான்கு வருடங்களில் மழை நீர் சேகரிப்பில் பின்பற்றப்பட்ட செயல்திட்டம் பசி, வறுமையை நீக்கி வளம் மற்றும் மகிழ்ச்சியை விவசாயிகள் வாழ்வில் ஏற்படுத்தி வருகிறது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக மேற்குவங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் மழை நீர் சேகரிப்பு மற்றும் தண்ணீர் பாதுகாப்பு பற்றிய விவாதங்கள் ஜனவரி 16, 2004 அன்று நடைபெற்றது. குறிப்பாக மாநிலத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்து எந்தவிதமான சட்டம் இல்லாத சூழலில் தமிழகத்தில் உள்ளது போன்ற மழைநீர் சேகரிப்பு முறைகள் தண்ணீர் பற்றாக்குறை சூழலை தவிர்த்து வறுமை ஒழிப்பில் முக்கிய தீர்வாக அமைந்துள்ளது. மேற்குவங்கத்தில் உள்ள கொல்கத்தா நகரில் இருந்து சுமார் 165 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பால்கி கிராமத்தில் மழைநீர் சேகரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் ஒரு விசித்திர கதை போல் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை மழை இல்லாமல் பயிர் சாகுபடி பொய்த்து விடும் சூழல், விவசாயிகள் மற்றும் கிராமவாசிகள் பசியால் வாடி வந்தனர். முன்பு நெற்களஞ்சியம் என்று அழைக்கப்பட்ட பகுதிகளில் இத்தகைய வேளாண் வீழ்ச்சிக்கு காரணம் குறித்து ஆய்வு செய்த போது மழை நீர் சேகரிக்கப்படாமல் அருகில் உள்ள அஜாய் நதிக்கு சென்று விடும் நடைமுறை சூழல் நிலவியது. எனவே, மழை நீர் நிலத்தில் சேகரிக்கப்படாமல் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வறண்டு போய் தீர்வுகளே இல்லாத சூழல் நிலவுகிறது.

மேற்குவங்கத்தின் அனைத்து பகுதிகளிலும் பருவ காலங்களில் மழை பெய்தாலும் அதனை சேமித்து வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இத்தகைய சூழலில் தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் சார்பில் மேற்குவங்கத்தில் மழை நீரை சேகரிக்க இடங்களை தேர்வு செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2002 ஆம் வருடத்தில் பர்துவான் மாவட்ட சபை சார்பில் பால்கி கிராமம் தேர்வு செய்யப்பட்டு, இதற்கு தேவைப்படும் நிதி “பால்கி ஜல பிகாஜிகா பிரகல்பா” திட்டத்தில் பெறப்பட்டு, செயல்படுத்தப்பட்டது. முதலில் விவசாயிகள் இத்திட்டத்தில் சேர பலர் தயக்கம் காட்டினர். ஆனால் தொடர்ந்து பல விழிப்புணர்வு பிரச்சாரங்கள் வீடு வீடாக மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து மூன்று முன்கட்டாய செயல்பாடுகள் வகுக்கப்பட்டது. இதன்படி விவசாயிகள் அனைவரும் சில நாட்கள் இத்திட்டத்தில் இணைந்து வேலை செய்ய வேண்டும். மரங்களை வெட்டக் கூடாது மற்றும் மேய்ச்சலுக்கு தடை போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் செயல்பட துவங்கிய போது, விவசாயிகளே தங்களுக்குள் குழுக்களை உருவாக்கி இத்திட்டத்தின் பணிகளை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.

ஒவ்வொரு குழுவுக்கும் தனியாக தலைவர் உருவாக்கப்பட்டு கிராமத்தில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பும் உறுதி செய்யப்பட்டது. பின்னர் நிலம் மழை நீர் சேகரிக்கும் வண்ணம் தயார் செய்யப்பட்டது. மிகவும் வறண்ட மண் தோண்டப்பட்டு சிறிய அளவிலான மண் அரண்கள் உருவாக்கப்பட்டு மழை நீரை சேகரிக்கும் குளங்கள் உருவாக்கப்பட்டன. இதன் வாயிலாக மழைநீர் சேகரிக்கப்பட்டு அடுத்த பருவத்தில் வளர்ச்சி மற்றும் வளத்திற்கு வழி வகை செய்தது. இதன் காரணமாக நிலத்தின் விலை மதிப்பு உயர்ந்ததுடன், குளங்களில் மீன்களும் வளர துவங்கியது. மேலும் 7 ஆயிரம் மரங்கள் வளர்க்கப்பட்டு வெப்ப அளவும் வெகுவாக குறைக்கப்பட்டது. குளங்கள் அருகில் தோட்டக் கலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. மிகுதியான பழங்கள் மற்றும் காய்கறிகள் அருகில் உள்ள நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு அதிக லாபம் பெறுகின்றனர். மேலும் பல மூலிகை செடிகளும் நெல் சாகுபடியுடனும் சேர்ந்து வளர்க்கப்பட்டு கடந்த 8 ஆண்டுகளில் மழைநீர் சேகரிப்பு வாயிலாக ஒரு கிராமப்புற வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

====பேரா. தி.ராஜ்பிரவின்====

;