tamilnadu

img

பெரியார்... லெனின்... வித்யாசாகர்...!

முதலில் பெரியார் சிலை; பின்னர் லெனின் சிலை; இப்பொழுது ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலை - ஆர்.எஸ்.எஸ். /பா.ஜ.க. குண்டர்கள் உடைத்த சிலைகளின் பட்டியலில் வங்க மறுமலர்ச்சியின் பிதாமகர்களில் ஒருவராக கருதப்படும் பண்டிட் விதயாசாகர் சிலையும் 15.09.2019 அன்று இணைந்தது. ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் பாசிச குணத்தை வெளிப்படுத்தும் இன்னொரு செயல்தான் இது எனில் இரண்டாவது கருத்துக்கு அதில் இடமில்லை!மேற்கு வங்கத்தில் கடைசி கட்ட தேர்தல்கள் 19.05.2019 அன்று நடக்க உள்ளன. அனைத்து கட்சிகளும் உச்சகட்டதேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் கொல்கத்தாவில் அமித் ஷா பேரணியின் பொழுது வன்முறை வெடித்தது.பேரணி வித்யாசாகர் கல்லூரி வழியாக சென்ற பொழுது திரிணாமுல் கட்சியினர் சிலர் அமித் ஷாவை எதிர்த்து முழக்கமிட்டனர். வித்யாசாகர் கல்லூரி மாணவர்கள் சிலர் கறுப்புக்கொடி காட்டியதாக கூறப்படுகிறது. அதனை எதிர்த்த பா.ஜ.க. வினர் வித்யாசாகர் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்தனர். அந்த கல்லூரியினுள் இருந்த வித்யாசாகர் சிலையை கொடூரமாக தாக்கி உடைத்து கீழே தள்ளினர்.

மோடி சேவைக்கு இன்னுமொரு சாட்சி

கொல்கத்தாவில் நடந்த வரலாறு காணாத வன்முறை காரணமாக 17.05.2019 மாலையுடன் நிறைவு செய்ய வேண்டிய பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் அரசியல் சட்ட விதி எண் 324ஐ பயன்படுத்தி 16.05.2019 அன்று இரவு 10 மணிக்கே முடிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது. இவ்வாறு தேர்தல் ஆணையம் செய்வதுஇதுதான் முதல் முறை. வன்முறைதான் காரணம் எனில் 16.05.2019 அன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரத்தை ஆணையம் நிறுத்தியிருக்கலாம்! ஆனால் இரவு 10 மணிஎன கூறுவதன் சூட்சுமம் என்ன? ஏனெனில் 16ஆம் தேதி இரவு இரண்டு கூட்டங்களில் மோடி பேசுகிறார். அவருக்கு ஆதரவாகவே ஆணையம் 10 மணி என ஆணை பிறப்பித்துள்ளது. ஆணையத்தின் மோடி சேவைக்கு இன்னுமொரு சாட்சி இது!

இடதுசாரிகளின் பிரம்மாண்டபேரணி

கொல்கத்தா வன்முறைக்கு மம்தா- மோடி/அமித் ஷா ஆகிய இவர்களின் போட்டி மதவாத வன்முறைகள்தான் அடிப்படைக் காரணம். எனினும் சங் பரிவாரத்தினர் வித்யாசாகர் அவர்களின் சிலை உடைத்தது என்பது வங்காளத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. இந்த பாசிசக் கொடூரம் வங்க மக்களிடையே கடும் கோபத்தையும் ஆவேசத்தையும் தோற்றுவித்துள்ளது. அடுத்த சில மணி நேரங்களிலேயே இந்த சிலை உடைப்பை கண்டித்து ஒரு பிரம்மாண்டமான பேரணியை இடது முன்னணி நடத்தியது. எந்த இடத்தில் சிலை உடைக்கப்பட்டதோ அதே கல்லூரி வழியாக நடை போட்ட இந்த பேரணியில் தோழர்கள் சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், பிமன் போஸ், சூர்யகாந்த மிஸ்ரா உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

வங்க மக்களது பண்பாட்டின் அடையாளம்

வித்யாசாகர் வங்கத்தின் வளமான பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் ஆவார். வங்க மறுமலர்ச்சியின் பிதாமகர்களில் ஒருவர்.தமிழகத்தில் அயோத்திதாசர், பெரியார்; கேரளத்தில் நாராயணகுரு, அய்யன்காளி; மராட்டியத்தில் ஜோதிபா பூலே; கர்நாடகத்தில் பசவண்ணா அல்லது இந்திய அளவில் அம்பேத்கார் போன்ற பல சமூக சீர்திருத்தப் போராளிகளின் வரிசையில் போற்றப்படுபவர் வித்யாசாகர். இவரது முன்னோடிகளான ராஜாராம் மோகன் ராய் போன்றோரின் மறுமலர்ச்சிப் பாதையை வலுவாக முன்னெடுத்தவர் வித்யாசாகர்.பல சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தாலும் இரண்டு மிக முக்கிய அவரது பணிகளை குறிப்பிடுவது அவசியம் ஆகும். ஒன்று வங்க மொழியைக்கற்பதற்கு எளிதான எழுத்துக்களை உருவாக்கியது; இன்னொன்று பெண்கள் முன்னேற்றம் குறிப்பாக விதவைபெண்களின் அடிமைத்தனத்தை ஒழிக்க பாடுபட்டது; இவை இரண்டும் மிக முக்கியமான நடவடிக்கைகள் ஆகும். 1820ஆம் ஆண்டு பிறந்த வித்யாசாகர் 1891ஆம்ஆண்டு மறைந்தார். அந்த கால கட்டத்தின் பின்னணியில் வித்யாசாகரின் நடவடிக்கைகள் மிகவும் துணிச்சலானவை என்பதை கூறத்தேவை இல்லை.கடந்த 170 ஆண்டுகளாக வங்காளிகள் கற்கும் மொழியின் அரிச்சுவடி வித்யாசாகர் அவர்களால் வடிவமைத்தது ஆகும். அவர்கள் வங்கத்தில் வாழ்ந்தாலும் அல்லது பிறமாநிலங்களில் வாழ்ந்தாலும் அல்லது வெளி நாடுகளில் வாழ்ந்தாலும் அவர்களது குழந்தைகள் முதல் எழுத்தை எழுதும் பொழுது பெற்றோர்கள் வித்யாசாகரின் நினைவுடன்தான் தமது கல்வியை குழந்தைகளுக்கு தொடங்குகின்றனர். வங்க மொழி எழுதும் பொழுதும் அல்லது பேசும் பொழுதும் அதில் உயிர்ப்புடன்வித்யாசாகர் வலம் வருகிறார். எனவேதான் வங்கத்து மக்களின் பண்பாடு கலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்து நிற்கிறார் வித்யாசாகர். அத்தகைய வித்யாசாகரின் சிலையைத்தான் ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகள் உடைத்துள்ளனர்.

பெண் உரிமைக்காக வலுவான குரல்

வித்யாசாகர் காலத்திற்கு முன்பு ராஜாராம் மோகன்ராய் அவர்களின் முயற்சியால் கணவனை இழந்தபெண்கள் உடன்கட்டை ஏறும் கொடுமையான வழக்கத்திற்கு எதிராகச் சட்டம் இயற்றப்பட்டது. எனினும் விதவைப் பெண்களின் வாழ்வு மிகவும் கொடூரமாகவே இருந்தது. அவர்கள் விலங்குகளை போல நடத்தப்பட்டனர். எந்த உரிமையும் இல்லை; அவர்களின் எவ்வித நியாயமான உரிமையும் அல்லது உணர்வும் அங்கீகரிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட அடிமைகள் போலவே விதவைகள் நடத்தப்பட்டனர். இதனைக் கண்டித்து வித்யாசாகர் மிகப்பெரிய பிரச்சாரத்தையும் இயக்கத்தையும் உருவாக்கினார். விதவைப் பெண்களின் மறுமண உரிமைக்காக வித்யாசாகர் குரல் எழுப்பினார். இதன் காரணமாக சனாதனவாதிகள் கடும் கோபம் கொண்டனர். தனது மகனுக்கு ஒரு விதவையை திருமணம் செய்து வைப்பாரா என வித்யாசாகரை இழிவுபடுத்த முனைந்தனர். தனது கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் தனது மகனுக்கு ஒரு விதவையை திருமணம் செய்துவைத்து தனது எதிரிகளின் திமிரை அடக்கினார் வித்யாசாகர். கொள்கையைப் பேசுபவன் மட்டுமல்ல; அதனை நடைமுறைப்படுத்துபவனும் கூட என்பதை நிரூபித்தார் வித்யாசாகர்.விதவைப் பெண்கள் மட்டுமல்லாது அனைத்து பெண்களின் கல்வி உரிமைக்காகவும் போராடினார். கல்வி இல்லாமல் பெண்கள் முன்னேற முடியாது; பெண்கள் முன்னேறாமல் சமூகம் முன்னேறாது என உறுதியாக வித்யாசாகர் நம்பினார். பெண்களின் கல்விக்காகவே பள்ளிகளையும் கல்லூரியையும் தொடங்கினார். அந்தகல்வி நிலையம்தான் கொல்கத்தாவில் உள்ள வித்யாசாகர் கல்லூரி. அந்த கல்லூரியில் இருந்த அவரின் சிலையைத்தான் பாசிஸ்டுகள் உடைத்து அராஜகம் செய்துள்ளனர். வித்யாசாகரின் இன்னொரு முக்கிய பங்களிப்பு வங்க தேசியத்தை பிரிட்டிஷாரின் அடக்குமுறைக்கு எதிராகமுன் நிறுத்தியது ஆகும். ஒரு வளமான தேசியம் அடக்குமுறையின் கீழ் உயிர்வாழ முடியாது என்பதைக் கூறிய அவர் பின்னாளில் வங்க மக்கள் பிரிட்டனின் ஆட்சிக்கு எதிராக போராடக் களம் அமைத்தார் எனில் மிகை அல்ல.

இந்துத்துவாவை நிராகரித்த இந்து!

வித்யாசாகர் ஒரு பிராமண இந்துதான்! எனினும் சனாதனத்தின் கொடுமைகளை எதிர்த்துக் களம் கண்டார். அதனாலேயே சனாதனிகளின் கோபத்திற்கும் ஆளானார். அவர் இந்து மதத்தின் அபிமானியாக இருந்தார். ஆனால் பின்னாளில் இந்துத்துவா என பரிணமித்த இந்து மத வெறியை ஆதரிக்கவில்லை. சனாதானிகளை எதிர்த்து அவர் பங்கேற்ற பிரம்ம சமாஜம் கடும் சவாலை முன்வைத்தது. இதனால்தான் சங்பரிவாரத்தினர் வித்யாசாகரை ஏற்பது இல்லை. அவர்களது இந்துத்துவா பட்டியலில் ராஜாராம் மோகன் ராய், வித்யாசாகர், ரவீந்திர நாத் தாகூர் ஆகியோருக்கு இடமில்லை. எனவேதான் வித்யாசாகரின் சிலை உடைப்பதில் இந்துத்துவா அமைப்பினருக்கு எவ்வித தயக்கமும் இருக்கவில்லை. ஒரு வேளை அவர்கள் வித்யாசாகர் சிலை உடைப்பில் உள்ளூர மகிழ்ச்சி அடைந்தாலும் அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை.ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாசிசம் இந்திய சமூகத்தின் மூன்று முக்கிய உட்கூறுகளை அழிக்க முனைகிறது. அவை:

* முஸ்லிம் மற்றும் கிறித்துவ சிறுபான்மை மக்களின் உரிமை

* பிற்படுத்தப்பட்ட/தலித்/பழங்குடி இன மக்களின் உரிமைகள் 

* தமிழகம்/வங்காளம்/கேரளம் போன்ற மாநிலங்களில் உள்ள வளமான தேசியமும் அதன் அடிப்படையில் உருவான மொழி/பண்பாடு மற்றும் கலாச்சார உரிமைகள்.

ஒரே மதம்- ஒரே மொழி- ஒரே கலாச்சாரம் எனும்இந்துத்துவா ஒற்றைக் குமிழிக்குள் ஏனைய உரிமைகளை அடக்கிட பாசிச சக்திகள் முயல்கின்றன. பெரியார், அம்பேத்கார், லெனின் மற்றும் வித்யாசாகர் சிலைகள் உடைப்பில் பாசிச சக்திகள் தமது ஒற்றைக் கோட்பாடை முன்வைக்க முயல்கின்றன. பாசிச சக்திகளின் இந்த முயற்சியை முறியடிக்க தமிழகம், கேரளம்,காஷ்மீர் போன்ற பல முனைகளில் எதிர்வினை செயல்படுகிறது. தமது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் தனித்துவத்தை பெரிதும் போற்றும் வங்க மக்கள் வித்யாசாகர் சிலை உடைப்பில் கடும் கோபம் கொண்டுள்ளனர். பாசிச சக்திகளுக்கு எதிராக இன்னுமொரு எதிர்வினை தீவிரமாக வங்கத்தில் உருவாகியுள்ளது. வித்யாசாகர் சிலை உடைப்பில் உருவாகியுள்ள வங்க மக்களின் கோபாவேசம் அதற்கு கட்டியம் கூறுகிறது.