நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் வெளியாகவுள்ள படத்திற்கு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் வாழ்க்கையை மையமாக கொண்ட திரைப்படம் தான் “சபாக்”. இத்திரைப்படத்தில் லட்சுமி அகர்வாலாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தீபிகா படுகோனும் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் நாளை (ஜனவரி 10) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதனிடையே, ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்திற்கு நேரில் சென்று தீபிகா படுகோன் ஆதரவு தெரிவித்து இருந்தார். இதற்கு ஒரு தரப்பினர் பாராட்டு தெரிவித்தாலும், மற்றொரு தரப்பினர் விமர்சனங்களை முன் வைத்ததோடு சபாக் படத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில், இப்படத்திற்கு வரி விலக்கு அளித்துள்ளதாக அம்மாநில முதல்வர் கமல்நாத், தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சத்தீஸ்கர் முதல்வர் அலுவலகமும் இப்படத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளது.