tamilnadu

img

மனிதம் பேசும் சினிமாக்கள் - எஸ்.இளங்கோ

உலக சினிமா ஆர்வலர்களின் விழா  இது.  சினிமாவை கலையாக பார்க் கும் ரசிகர்களின்  கொண்டாட்டம் இது.  தமிழ்நாடு அரசின் ஆதரவோடு 17 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா இந்தோ  சினி அப்ரிசியே­ன் பவுண்டேசனால் சிறப்பாக நடத்தப் பெற்றது.  டிசம்பர் 12 துவங்கி 19 வரை  எட்டு நாட்கள்.  உலக சினிமாக்கள், சமகால ஜெர்மனி மற்றும் ஈரான் சினிமாக்கள், பெர்லின் சுவர் வீழ்த்தப்பட்ட 30 ஆண்டு நினைவாக அது  பற்றிய சினிமாக்கள், சிறப்பு பிரிவில் ஆஸ்த்ரே லியா, ஹங்கேரி, தாய்லாந்து, தைவான் நாடு களின் சினிமாக்கள், இந்திய சினிமாக்கள் மற்றும் தமிழ் சினிமாவுக்கான போட்டிப் பிரிவு சினிமாக்கள் என பல தலைப்புகளின் கீழ் 140 க்கு  மேற்பட்ட சினிமாக்கள் 6 அரங்குகளில் திரை யிடப்பட்டன. கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே ஐரோப்பாவிற்கு அகதிகளாகப் போவோர் படும்  பாடுகள் பற்றிய சினிமாக்கள் அதிக எண்ணிக்கை யில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  ஆகப்பெரும் மனித துயரமாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் அகதிகளின் வாழ்க்கை நிலையை சினிமாக்கள் நம் நெஞ்சுக்கருகே கொண்டு வந்து நம்மை கலக்கமடைய வைக்கின்றன என்றால் மிகையில்லை.  பல்வேறு  நாடுகளில் வாழும் பலதரப்பட்ட மனிதர்களின் குடும்ப மற்றும் சமூக வாழ்க்கையை அசலாக படம் பிடித்து தரும் சோஷியல் டிராமா (Social Drama), ஃபேமிலி டிராமா (Family Drama)  வகை சினிமாக்களை இவ்வாண்டு அதிகம் காண முடிந்தது.

டெஸ்பைட் தி பாக் (Despite the Fog) ஒரு  இத்தாலிய திரைப்படம்.  இப்ராஹிம் நான்கு  வயதுச் சிறுவன். இப்ராஹிமின் பெற்றோர்கள் ஐரோப்பாவை நோக்கி ஓடி வந்த இஸ்லாமிய  அகதிகள்.  கடலில் படகு கவிழ்ந்து பெற்றோர்கள்  இறந்து விட, காப்பாற்றப்பட்டு இத்தாலியக் கரை  வந்து சேருகிறான் இப்ராஹிம். அநாதையாக நிற்கும் இப்ராஹிமை பாவ்லோ-வாலறியா என்ற  இத்தாலிய, கிறித்தவத் தம்பதிகள் ஆதரிக்கின்ற னர். விபத்தில் இறந்து போன தங்கள் மகன்  மார்க்குக்குப் பதிலாக இப்ராஹிமை, இயேசுவே  அனுப்பியுள்ளதாக வாலறியா மகிழ்கிறாள். இப்ராஹிம் மீது அன்பைப் பொழிகிறாள் வால றியா. இப்ராஹிம் சிறுவன் என்றாலும் தொழுகை  செய்வது, பன்றிக் கறியைத் தவிர்ப்பது  போன்ற  தனது மத நம்பிக்கைகளில் உறுதியாக இருக்கி றான். பாவ்லோ-வாலறியா  தம்பதிகள் இப்ரா ஹிம் என்ற இஸ்லாமியச் சிறுவனை ஆதரித்து,  வளர்த்து வருவது அவர்களின் நெருங்கிய  உறவினர்களுக்கும், அக்கம்பக்கத்தார்க ளுக்கும் நெருடலைத் தருகிறது.  நெருங்கி வரும் கிறிஸ்துமஸ் விழாவினால் இயேசு, பைபிள், சர்ச் போன்றவை இப்ராஹிமுக்கு அறி முகப்படுத்தப்படுகிறது. வாலறியாவின் அன்பை  உணரும் இப்ராஹிம் அவளிடம் அனுசரணை யாக நடந்து கொள்கிறான்.  என்றாலும் அச்சிறு வன் தனது மத நம்பிக்கையில் உறுதியாக இருக்கி றான். எனவே இப்ராஹிமை அகதிகள் முகாமில்  ஒப்படைத்துவிடும்படி வாலறியா வற்புறுத்தப் படுகிறாள்.  தாயற்ற இப்ராஹிமுக்கு தானும், குழந்தையற்ற  தனக்கு இப்ராஹிமும் தேவை  என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இப்ராஹி மோடு தலைமறைவாகிறாள் வாலறியா.

ஐரோப்பாவில் மட்டும் பெற்றோரை இழந்த,  இப்ராஹிமைப் போன்ற 10000 சிறுவர்கள் அநாதைகளாக அலைந்து திரிவதாகவும், அதில் பாதிப்பேர் (5000) இத்தாலியில் மட்டும் இருப்பதாகவும் இன்டர்போல் கணக்கெடுப்பு கூறுகிறது என்ற செய்தியோடு படம் நிறைவுறு கிறது.  ஒரு தாயின் தவிப்பினை நம் மனம் உருகப் பேசுகிறது இத்திரைப்படம். சென்ட் ஆப் மை டாட்டர் (Scent of My Daughter) ஒரு துருக்கிப்படம்.  பிரான்சில் வாழும்  பீட்ரிஸ் திருவிழா ஒன்றிற்காக பெற்றோரை வர வழைக்கிறாள்.  அங்கு நடைபெறும் தீவிரவாத தாக்குதலில் பெற்றோரையும், தனது ஒரே மகளை யும் இழக்கிறாள்.  அழுது கதறும், பீட்ரிஸ் அவர்க ளைப் புதைப்பதற்காக துருக்கி-சிரியா எல்லை யில் இருக்கும் தனது கிராமத்திற்கு வருகிறாள்.   தான் மட்டும் அநாதையாகிவிட்ட துக்கத்தில் பீட்ரிஸ் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறாள்.  அப்போது ஹெவை என்ற ஒரு சிரியா நாட்டு இளம் பெண்ணால் காப்பாற்றப்படுகிறாள்.  ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடமிருந்து தானும், தன்  சகோதரியும் தப்பி வந்ததாகக் கூறும் ஹெவை,  தனது சகோதரியை எண்ணி, கலங்கி அழுகிறாள்.  ஹெவையை அணைத்து ஆறுதல் கூறும் பீட்ரிஸ் அவளிடம் தனது மகளின் வாசனையை உணர்வதாகக் கூறுவதோடு,  அவளது சகோத ரியை எப்படியேனும் கண்டுபிடித்து தருவதாக  உறுதி அளிக்கிறாள். இவர்களுக்கு இப்ராஹிம்  என்ற இளைஞனும் உதவுகிறான்.  ஒருவ ருக்கொருவர் அறிமுகமற்ற இவர்களை தீவிர வாதம் சந்திக்க வைக்கிறது.  துருக்கி ராணு வத்திற்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருக்கும் சண்டை நடக்கும் துருக்கி-சிரியா எல்லைப் பகுதி களில் ஹெவையின் சகோதரியைத் தேடி அலைகிறார்கள் மூவரும்.

கிரீஸ் நாட்டின் ஹோலி பூம் (Holy Boom)  திரைப்படமும் ஏதென்ஸ் நகரில் சட்ட விரோத மாகக் குடியேறி வாழும் இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோரின் துயரக் கதை யைப் பேசுகிறது.   இவ்வரிசையில் சன்ஸ் ஆப் டென்மார்க் (Sons of Denmark) படமும் முக்கியமானது.  2025 இல் நடப்பது போன்ற ஒரு கற்பனைக் கதை. இருபதாண்டுகளுக்கு முன்னர் துவங்கி நடந்து வரும் இஸ்லாமியர் குடியேற்றத்தை வன்மையாக எதிர்க்கும் டென்மார்க் தேசீய கட்சி ஒன்று மக்களிடம் செல்வாக்குப் பெற்று  வளர்ந்து வருகிறது. மார்டின் நார்டால் என்ற  அக்கட்சியின் தலைவரை கொல்வதற்கு ஜக்கா ரியா என்ற இஸ்லாமிய இளைஞனை தயார் படுத்துகிறது  தலைநகர் கோபன்ஹேகனில் இயங்கும் இஸ்லாமிய தீவிரவாதக் கும்பல் ஒன்று.  அலி என்பவன் ஜக்காரியாவுக்குப் பயிற்சி  அளிக்கிறான்.  ஆனால் அலி உண்மையில் டென்மார்க் அரசின் ரகசிய போலீஸ்.  தீவிரவாதக் கும்பலுக்குள் ஊடுருவி, நார்டா லைக் கொல்ல முயலும் அவர்களின் திட்டத்தை  முறியடிப்பதோடு அவர்களைக் கைதும் செய்து சிறையிலடைக்கிறான் அலி.  அலிக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்கிறார் மார்டின் நார்டால்.

தேசியவாதியான மார்டின் நார்டால் தேர்த லில் வெற்றி பெறுகிறார்.  அவர் பதவியேற்க இருக்கும் நாளுக்கு முந்தைய இரவு இஸ்லாமி யர்கள் மீது பெரும் தாக்குதலுக்கு திட்டமிடு கிறார்கள் நார்டாலின் தேசியவாதக் கட்சியினர்.  இதையும் கண்டுபிடித்துக் கூறும் ரகசிய போலீஸ் அலியின் வார்த்தைகளை அலட்சியப்படுத்து கிறார் நார்டால்.  அலியின் வீடு தீ வைத்துக் கொளுத்தப்படுகிறது.  மனைவியின் முகத்தில் ஆசிட் வீசுகிறார்கள். குழந்தையை சுட்டுக் கொல்கிறார்கள். கொதித்தெழும் அலி, நார்டாலை அவரது வெற்றிக் கூட்டத்தில் வைத்து சுட்டுக் கொல்கிறான். இப்படியான கதையை உருவாக்கி, அதை  பரபரப்பான ஆக்சன், திரில்லர் சினிமாவாக்கி யிருக்கிறார்கள்.  கதை கற்பனையாகவே இருக்குமா? அல்லது உண்மையில் நடந்து விடுமா? என்ற அச்சம் ஏற்படுகிறது.   பிரான்சில் படித்து, பட்டம் பெற்று திரும்பும் செல்மா டுனிசியாவில் மனநல மருத்துவராக தொழிலை துவங்குகிறார்.  மத பிற்போக்குதனம், மூட நம்பிக்கைகள், அரசின் கெடுபிடி என்று செல்மா வுக்கு ஏற்படும் அனுபவங்களை நகைச்சுவை யாக சொல்கிறது அராப் ப்ளூஸ் (Arab Blues)  என்ற டுனீசிய திரைப்படம்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து போர்ச்சுகல்லுக்கு சட்ட விரோதமாக ஆட்க ளைக் கடத்துகிறார்கள்.  குறிப்பாக பெண்கள்.  இந்த பயங்கரத்தை தோலுரிக்கிறது கார்கா (Carga) போர்ச்சுகல் திரைப்படம்.  மேம்பட்ட வாழ்க்கையைத் தேடி ஓடும் ஏழைப் பெண்களை  சுயநலக் கும்பல்கள் பிடித்து, வதைத்து, விற்று  பணம் சம்பாதிக்கிற கொடுமை உலகம் முழு வதும் நடந்து கொண்டிருக்கிறது. முன்னாள் சோச­லிஸ நாடான ருமேனிய நாட்டின் தோ ஷால்ட் நாட் கில் (Thou Shalt Not Kill) என்ற படம் கிறிஸ்டியன் என்ற அறுவை சிகிச்சை மருத்துவர் ஊழலுக்கு எதிராகப் போராடுவதைக் காட்டும் படம்.  உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.  அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தாலும் நோயாளிகள் மரண மடைகிறார்கள்.  இது ஏன்? என்று கிறிஸ்டியன் ஆராய்கிறார்.  செப்டோபார்மா என்ற மருந்து கம்பெனி புகாரெஸ்ட் நகரின் அனைத்து மருத்துவமனைகளுக்கும் கிருமிக்கொல்லி மருந்துகளை தயாரித்து அனுப்புகிறது.  அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுப்பதால் கிருமிக்கொல்லி மருந்தில் தண்ணீர் கலந்து அனுப்புகிறார்கள். கலப்பட  மருந்தினால் நோயாளிகளின் அறைகளிலும், அறுவை சிகிச்சை அரங்கிலும் கிருமித் தொற்றினை தடுக்க இயலவில்லை.  கிருமித்தொற்று தாக்கி நோயாளிகள் மடிகிறார்கள்.  இதனைக் கண்டு பிடிக்கும் கிறிஸ்டியன் கலப்பட மருந்திற்கு எதிராக ஆவேசத்தோடு போராடுகிறார்.  அதிகாரிகள், அமைச்சர் வரை போய் முறையிடு கிறார்.  மனைவியும், நண்பர்களும் இது  அவருக்கு தேவையில்லாத வேலை என்று அறிவுரை கூறுகிறார்கள்.  லஞ்ச மும், ஊழலும் மட்டுமல்ல அதி காரத்திற்கு அஞ்சுகிற மனிதர்களும் நிறைந்து கிடக்கிறது மருத்துவத் துறை.  எதையும் மாற்றிவிட முடியாத துயரத்தில் தவிக்கும் கிறிஸ்டியனுடன் நாமும் இணைகிறோம்.

தி கவுன்ட்டி என்ற ஐஸ்லாந்து திரைப்படமும் ஊழலைப் பற்றிப் பேசுகிறது. இங்கா என்ற பெண் பால்மாட்டுப் பண்ணை நடத்துகிறாள்.  அங்குள்ள கூட்டுறவு சங்கத் தலைவர் பால் உற்பத்தியாளர்களை ஏமாற்றி ஊழல் செய்கிறார்.  கூட்டுறவு சங்கத்தி டம் கடன் பெற்ற இங்காவின் கணவர் இந்த ஊழலை எதிர்க்க முயலுகிறார்.  ஆனால் மிரட்டலுக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொள்கிறார்.  விசயமறியும் இங்கா ஒற்றை ஆளாக சங்கத் தலைவரை எதிர்த்துப் போராடுகிறார்.  ஆனால் இறுதியில் சங்கத் தலைவரே வெல்கிறார்.  இங்கா ஊரை விட்டு வெளியேறுகிறார்.  ஊழல் உலகளாவியது என்று நாம் மீண்டும் அறிந்து கொள்கிறோம்.  சாங்  விதவுட் எ நேம் (Song Without A Name) என்ற பெரு நாட்டுப் படமும் 1980 களில் இலவசப் பிரவசம் என்று வரவழைத்து, கர்ப்பிணிப் பெண்களை ஏமாற்றி, குழந்தைகளைத் திருடி, கடத்தும் கும்பலைப் பற்றிய படம். காவல் துறை இந்த அக்கிரமத்துக்கு துணை போகிறது.   ஈரானின் தி வார்டன் (The Warden)  திரைப்படத்தின் கதை ஒரு சிறைச்சாலை யில் நடப்பதாக இருக்கிறது. விமான ஓடுபாதை விரிவாக்கத்துக்காக சிறைச்சாலையை இடிக்க உத்தர விடப்படுகிறது.  கைதிகளை காலி பண்ணிச் செல்கையில் ஒரு கைதி தப்பிக்கும் நோக்கோடு மறைந்து கொள்கிறார்.  கைதி எப்படிக் கண்டு பிடிக்கப்படுகிறார் என்பதை சுவாரசிய மாகச் சொல்கிறார்கள்.   ஜஸ்ட் 6.5 (Just 6.5), இன்னொரு ஈரானியப்ப டம். கஞ்சா விற்கும் கும்பலை வேட்டை யாடும் காவல் துறையினரின் போராட்டத்தைச் சொல்கிறது. கதை களில் வித்தியாசம் காட்டுகிறார்கள் ஈரானியர்கள்.  அதனாலேயே ஈரானியப்  படங்களுக்கு பெருத்த வரவேற்பு இருப்பதைப் பார்க்க முடிந்தது. சிங்கப்பூரின் "ஸ்டோரிஸ் அட்  எய்ட்", ஹங்கேரியின் "தி எக்ஸ்பி ளாய்ட்டட்", இதாலியின் "அமெரோ அமாரோ", சீனாவின் "சம்மர் ஆஃப் சாங்சா", பிரேசிலின் 

"ஹெல்மட் ஹெட்ஸ்", நெதர்லாந்தின் "ஹை சீஸ்" போன்ற  படங்களின் கதைகள் சமூக நாடகங்க ளாக அமைந்து பார்வையாளர்களை ஈர்த்தன. வரலாற்று நாடக (History Drama)  வகைப் படங்களில் முக்கியமானது ஆர்கன் (Organ) என்ற ஜப்பானி யப்படம்.  இரண்டாம் உலகப் போரின் இறுதியில் டோக்கியோ நகரின் மீது அமெரிக்கா கடுமையான குண்டு வீச்சை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது, ஒரு குழந்தைகள் காப்ப கத்தில் நிகழ்வதான உண்மைக் கதை.  குழந்தைகளைக் காப்பாற்றும் பொருட்டு, பெற்றோரின் ஆதரவுடன் ஆசிரியர்கள் குழந்தைகளை ஒரு கிரா மத்திற்கு இடம் பெயர்த்துகிறார்கள்.  அந்த சின்னஞ்சிறு குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையினை காக்கும்  பொருட்டு ஆசிரியர்கள் செயல்படு கிறார்கள்.  பகல் நேரம் மட்டுமே குழந்தை களைக் காத்து வந்த ஆசிரியர்கள் இப்போது பல நாட்கள் இரவும், பகலும் அந்தக் குழந்தைகளோடேயே வாழும் அனுபவத்தை நெஞ்சை ஈர்க்கும் விதத்தில் சொல்கிறார்கள்.  இறுதியில் அந்தக் கிராமத்திலும் குண்டு வீசப்படுகிறது.  

பலூன் (Ballon), மற்றும் ஆதாம்  அன்டு எவலின் (Adam and Evelyn)  திரைப்படங்கள் கிழக்கு ஜெர்மனியி லிருந்து மேற்கு ஜெர்மனிக்கு ரகசிய மாகத் தப்பிச் செல்ல முனையும் மனிதர்களைப் பற்றியது.  குன்டர்மான் (Gundermann) கிழக்கு ஜெர்மனியில் வாழ்ந்த தொழிலாளியும், கவிஞர், இசைஞர், பாடகருமான குன்டர்மான் என்பவரைப் பற்றியது.  பலூன் ஒரு பரபரப்பான ஆக்சன், திரில்லர் ஆக உருவாக்கப்பட்டிருந்ததால் அதைக் காண ஆர்வலர்கள் முண்டியடித்தனர்.   க்யுரியோசா (Curiosa) மற்றும் போர்ட்ரெய்ட் ஆப் எ லேடி ஆன் ஃபயர் (Portrait of a Lady on Fire)  இரண்டும் 19 ஆம் நூற்றாண்டு மனி தர்களின் கதைகளைச் சொல்லும் பிரெஞ்சுத் திரைப்படங்கள்.  முதல் படம்,  ஒரு புகைப்படக் கலைஞனிடம் மனதைப் பறிகொடுக்கும் திருமணம் ஆன மேரி என்ற இளம் பெண்ணின் காதலைச் சொல்லும் படம்.  இரண்டா வது, பெண் ஓவியரான மரியானா வுக்கும் அவள் ஓவியம் வரைய விரும்பும் ஹீலோய்ஸ் என்ற பிரபு குடும்ப இளம் பெண்ணுக்கும் இடையே யான ஓரினக் காதலைச் சொல்லும் படம்.  காதலும், காமமும் கொப்பளிக்கும்  மனித உறவுகளை அப்பட்டமாக படமெடுத்து தருவது பிரான்சுக்கே உரிய கலை சுதந்திரம்.

ரஷ்யாவின் பீன் போல்  (Bean Pole)  திரைப்படம் இரண்டாம் உலகப் போர்  காலத்தில் லெனின்கிராடில் வாழ்ந்த பீன்போல் என்ற பட்டப் பெயரில் அழைக்கப்பட்ட  உயரமான ஒரு  பெண்ணைப் பற்றிய கதை.   ஜெர்மனி யின் ப்ளேம் கேம் (Blame Game) திரைப்படம் அரசியல்வாதிகள், ஆயுத வியாபாரிகள், தீவிரவாதிகளின் ரகசியக் கூட்டை போட்டு உடைக்கும் படம். ஃபேமிலி டிராமா வகைப் படங்களில்  ரசிகர்களின் ஆர்வத்தை ஈர்த்த படங்க ளுள் முக்கியமானவை பிரான்சின் "அலீஸ்", லெபனானின் "எ சன்", பல்கேரி யாவின் "ஐரினா", ஸ்வீடனின் "க்வீன் ஆப் ஹார்ட்ஸ்", ஜெர்மனியின் "தி மூவர்"  ஆகியன ஆகும். அஜர்பைஜிஸ்தானின் "தி பிரா", மொராக்கோவின் "தி அன்நோன் செயின்ட்" இரண்டும் மிக வித்தியாசமான படங்கள்.

மொத்தத்தில் விதம் விதமான கதைக்  களங்கள், திரையில் கதை சொல்லும் புதிய உத்திகள், இசையில், ஒளிப்பதி வில், படத் தொகுப்பில் நேர்த்தி என சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒரு  கலை விருந்து.  விழாவின் ஒரு பகுதியாக  விருதுகள் வழங்கும் விழாவும் நடை பெற்றது.  வாழ்நாள் சாதனையாளர் விருது நடிகர் சாருஹாசன் அவர்க ளுக்கு வழங்கப்பட்டது.  தமிழ் சினிமா வுக்கான போட்டிப் பிரிவில் நடுவர்க ளின் சிறப்பு விருதினை  அசுரன் திரைப்பட இயக்குநர் வெற்றி மாறன்  அவர்களும், சிறந்த படம், சிறந்த இயக்கு நருக்கான விருதினை ஒத்த செருப்பு படத்திற்காக நடிகர், இயக்குநர் பார்த்திபனும் பெற்றனர். சில்லு கருப்பட்டி, பக்ரீத் இரண்டு படங்களும் இரண்டாவது சிறந்த படங்களுக்கான விருதினைப் பகிர்ந்து கொண்டன.

கட்டுரையாளர் மின்னஞ்சல்: 
ilangovadigal@gmail.com

 

 

;