tamilnadu

img

ஆறாண்டும்... நாலாண்டும் - நெ.இல சீதரன்

மத்திய மோடி அரசு ஆட்சிக்கு வந்து ஆறு ஆண்டுகள் முடிந்து விட்டன. மாநில அதிமுக அரசு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டன. மத்திய அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மக்கள் விரோதச் செயல்களை ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்திய வண்ணம் உள்ளது.          

அரியணை ஏறியவுடன் ஆளுக்கு பதினைந்து லட்சம் வழங்கப்படும் என்று அது கொடுத்த தேர்தல் கால வாக்குறுதி முதலில் காற்றில் பறக்கவிடப்பட்டது.  இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், சரக்கு மற்றும் விற்பனை வரி என்ற பெயரால், மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் வண்ணம், ஜிஎஸ்டி சட்டத்தைக் கொண்டு வந்தது. அது சரியா, தவறா என யாருக்கும் புரியாத புதிராக இருந்த நிலையிலேயே அதனை செயல்படுத்தி விட்டது மத்திய அரசு. 

ஆண்டான் - அடிமை முறை

 ஏற்கனவே இருந்த வரிகளையெல்லாம் ஒழித்துக் கட்டிவிட்டு, புதிய அபரிமிதமான வரி உயர்வை ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு கொண்டு வந்தது. முன்பு குஜராத் முதல்வராக இருந்தபோது எதிர்த்த அதே ஜிஎஸ்டி வரியை இப்போது பிரதமராக மாறி, மோடி கொண்டு வந்தார்.   மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு வகையில், பல்வேறு சலுகைகளுடன், மாநில வளர்ச்சிக்கான மாநிலங்களின் நிதி ஆதாரமாக இருந்த வணிகவரி முறை ஒழித்துக் கட்டப்பட்டது. கடுமையான உயர்வுகளுடன் 28 சதவீதம் வரை வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டன. வணிகர் முதல் வாடிக்கையாளர் வரை அனைவருக்கும் பெருந்துன்பத்தை தந்தது இந்த வரிமுறை. 

மத்திய அரசிடமிருந்து மாநிலங்கள் தங்கள் பங்கை பெறுவது என்பதே பெரும் சிக்கலுக்கு உள்ளானது. நடைமுறையில் மாநில அரசுகள்  தத்தம் பங்கைப் பெறுவதில் ஆண்டான்-அடிமை முறை நிலவியது. சட்டப்படியான பங்கை ஒவ்வொரு ஆண்டும் உடனடியாக அளிக்கும் நடைமுறை எதுவும் இல்லை.  மத்திய அரசின் தயவை எதிர்நோக்கி கையேந்தி நிற்கும் பிச்சைப் பாத்திரங்களாக மாநில அரசுகளின் நிலைமைகள் மாறி உள்ளன. மத்திய அரசின் ஆளும் கட்சி ஆளும் மாநிலங்களுக்கு ஒரு அளவுகோலும், பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு வேறு அளவுகோலுமாக, சட்டபடியான பங்களிப்பை தருவதிலேயே மத்திய அரசின் ஓரவஞ்சனையும், விருப்பப்படி கொஞ்சம் கொஞ்சமாக தரும் போக்கும் மாநில உரிமைகள் மீதான துல்லிய தாக்குதலாக தொடர்கிறது. இது உண்மையில் இந்திய ஒன்றியத்தின் கூட்டாட்சி தன்மையையும், இந்திய அரசியல் சட்ட மாண்புகளையும் சீர்குலைக்கிறது. 

பயங்கரவாதத்திற்கு துணைபோகும், பொருளாதாரத்தை சீரழிக்கும், கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டுக்களையும் ஒழிக்கப் போகிறேன் என்று சொல்லி, எந்த முன்னறிவிப்புமின்றி, 2016 நவம்பர் 8 அன்று இரவு எட்டு மணிக்கு ரூ.500/- மற்றும் ரூ.1000/- நோட்டுக்களை செல்லாது என அறிவித்து அந்நாளை இந்திய மக்களுக்கு கருப்பு நாளாக்கினார் பிரதமர் மோடி. செல்லாத நோட்டுக்களை மாற்ற ஒரு நாளுக்கு அனுமதிக்கப்பட்ட தொகை உச்சவரம்பும், விதிக்கப்பட்ட காலக்கெடுவும் சாதாரண, நடுத்தர மக்களை படுத்திய பாட்டை நம்மால் மறக்க முடியுமா?   நூற்றுக்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்றே இறந்தனர். 

பத்து தலை முறைக்கு  திருடினால் வெளிநாடு....

கோடிகளில் வங்கிக் கடன் பெறுபவர்கள்தான், உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ அதிக பாதுகாப்புடன் இருக்கிறார்கள்.  இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடனை வாங்கிய பின், கடனை கட்டாமல், வெளிநாட்டுக்கு சென்று விடுவார்கள். கடனை திரும்பச் செலுத்தாதது மட்டுமல்ல, இது தொடர்பாக தொடுக்கப்படும் வழக்கையும், இங்கிலாந்து நீதிமன்றங்கள் உட்பட வெளிநாடுகளில் நடத்தும் தந்திரமும், வசதியும் கொண்டவர்களே இந்தியப் பெரும் பணக்காரர்கள். அவர்கள் பெரும் முதலாளிகளாய் இருப்பதும் இயல்பானதே. இவர்களுக்குத்தான் இந்திய வங்கிகளை விற்கத் துடிக்கிறது மத்திய அரசு.

பசிக்குத் திருடினால் விலங்கிடு.

பத்துத் தலைமுறைக்கு திருடினால் வெளிநாடு.

இதுதான் நம் நாடு. 

வங்கிகள் இணைக்கப்படுவதும், தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதும் எளிதான செயல்களாக மாறி விட்டன. இந்திய நாட்டின் செல்வ வளங்களை உருவாக்கப்பட்ட துன்பங்கள் எதுவும் பிரதமருக்கு தெரியாது. விடுதலைப் போரில் ஒரு செங்கல்லைக்கூட எடுத்து வைக்காமல், பிரிட்டிஷ் எதிர்ப்பின், இந்திய விடுதலையின் அடையாளமாய் விளங்கிய மகாத்மாவை சுட்டுக் கொன்ற, பிரிட்டிஷாருக்கு லாலி பாடிய அரசியல் வழியில் வந்தவர்களுக்கு, பொதுத் துறைகளை கொல்வது பிடித்தமான கோயில் இடிப்பு.

தொலைக்காட்சிகளில்  அவரது எல்லா உரைகளிலும் ஒரு மையக் கருத்து உண்டு. இந்தியா ஒரு வல்லரசு. அதை நாம் பாதுகாக்க வேண்டும். இன்னும் தியாகம் புரிய தயாராக வேண்டும் என எந்நேரமும் ஒரே அறிவுரைகள்தான். ஆனால், அதே நேரத்தில்,  சாதாரண, நடுத்தர மக்களை சுரண்டி, ஏமாற்றி, கோடிக்கணக்கில் சொத்துக்களை பெருக்கிக் கொள்ளும் கோமான்களுக்கு எதிராக ஒரு முணுமுணுப்பும்  இருக்காது.  மாறாக, அவர்களுக்கு மேலும் மேலும்  லட்சக்கணக்கான கோடிகளில் சலுகை மேல் சலுகைகள் அள்ளி வழங்கப்படுகின்றன.  

தேர்தலுக்கு ஓரிரு தினங்கள் முன்பாக, முற்பட்டவர்களுக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது என அறிவித்தது ஆதாயம் பெறுவதற்கானதே. இன்று பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டையே மறுப்பதும், அது உரிமையே அல்ல என கேள்விக்குள்ளாக்குவதும் அரசியல் சட்டத்தின் உள்ளடக்கத்திற்கே எதிரானதாகும்.  இப்படி அனைத்து வித தீமைகளையும் ஊக்குவிக்கும் விதத்தில், பொய்களை அடிப்படையாகக் கொண்டு ஊழல்களால் பூசி மெழுகிட்டு எழுப்பப்படும் மோசடிக் கட்டிடம்தான் மோடியின் மத்திய அரசு.  கணிசமான வாக்காளர்களை ஏமாற்றி எளிதாக தேர்தலில் வெற்றி பெறுவதில் தேர்ந்தவர் என்பது வேண்டுமானால் பிரதமரின் ஒப்பற்ற சாதனையாக இருக்கலாம். கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த எவ்வித அறிவியல் சார்ந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை மத்திய அரசு.  மாறாக தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட தோல்வியை மறைக்கப் பார்க்கிறது மத்திய அரசு. 

பேச்சுவார்த்தை மூலம்  அமைதியை காப்பது

இந்த நேரத்தில் சீன எல்லையில்  பதற்றம் ஏற்பட்டு, தற்போது  நாம்  20 இராணுவத்தினரின் இன்னுயிர்களை இழந்துள்ளோம். உச்சபட்ச தியாகமாக உயிரை ஈந்துள்ள வீரர்களுக்கு  வீர வணக்கமும்  அஞ்சலியும் செலுத்துகிறோம்.  முக்கியமான  நிகழ்வுகளில்கூட வெளிப்படைத்தன்மையின்றி இவ்வரசு செயல்படுவதால், அமெரிக்கா , இந்த எல்லை  பதற்றத்தில் மூக்கை நுழைத்து,  இந்தியாவையும் சீனாவையும் தனது சொந்த  வலையில் சிக்க வைத்து முடக்கிட நினைத்தது . ஆனால், அந்த  வலையில் சிக்காமல்,  இரு நாடுகளும் பேச்சுவார்த்தை  மூலம்  எல்லையில் அமைதி காப்பது என முடிவெடுத்தன.  ஒப்பந்தம்  ஏற்பட்ட சில நாட்களுக்குள்ளேயே மறுபடியும் எல்லையில் மோதல் நிகழ்ந்தது வருந்தத்தக்கது. மோதலை மேலும் தீவிரப்படுத்துவதை தவிர்க்கும் வகையில் பேச்சுவார்த்தைகள்  மூலம்  இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் முடிவெடுத்ததை வரவேற்கிறோம். 

பேச்சுவார்த்தை மூலம் இருதரப்பும், அமைதியை நோக்கிய செயல்பாடுகளை முன்னெடுப்பது மட்டுமே, இப்பேரிடர் காலத்தில் மட்டுமன்றி, சாதாரண காலத்திலும் இருநாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் என நம்புகிறோம்.   தேசத்தின்  பாதுகாப்பு  விவகாரத்தில்  மத்திய அரசின் நியாயமான நடவடிக்கைகளை ஆதரிக்க  ஜனநாயக சக்திகள்  தயாராக  இருக்கின்றன. உண்மை  நிலையை  தேசத்திற்கு தெரிவிப்பதன் மூலம்,  அவற்றின்  ஒத்துழைப்பையும்,  தேசத்தின்  ஒற்றுமையையும் மத்திய அரசு  உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் விரும்புகிறோம்.

மாநில உரிமைகள் பறிப்பு என்பது தொடர்கதையாக உள்ளது. நீட் என்ற பெயரால், மருத்துவக் கல்வி மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டது .  தமிழ்நாட்டில் இருந்த மருத்துவக் கல்லூரிகள் வட இந்தியர்களுக்கும், வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கும் விற்கப்பட்டு விட்டன. மீண்டும் மொழித் திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு, கலவரத் திணிப்பு, நடந்து கொண்டே இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை ஒவ்வொன்றாக கவிழ்க்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

கையாலாகாத்தனம் 

கொரோனாவின் பெயரால், ஊரடங்கும், 144 தடையாணையும் அறிவிக்கப்பட்டுள்ளன.  எல்லா தொழிலாளர்களையும், மக்களையும் வீட்டுக்குள் முடக்கிவிட்டு, தொழிலாளார்களுக்கு எதிரான அரசாணைகளை மத்திய அரசும் மாநில அரசும் பிறப்பித்துள்ளன.

கொரோனாவுக்கும், நான்கு மணி நேர இடைவெளியில்தான் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. என்னவோ நடைபெறப் போகிறதென்று எல்லோருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் என்ன நடக்கப்போகிறது என்றுதான் யாருக்கும் புரியவில்லை. ஆனால் மறுநாளே தெரியத் தொடங்கியது. 

இந்திய வரலாற்றில், இந்திய அரசின் கையாலாகாத்தனத்தால், சொந்த நாட்டிற்குள்ளேயே மக்கள் இந்தியாவின் தென் முனையிலிருந்து வட முனைக்கும், மேற்கு முனையிலிருந்து கிழக்கு முனைக்கும் பட்டினியும், பசியுமாய் நிராதரவாக பல நூறு கிலோ மீட்டர்களை காலால் அளந்து இரத்தம் கசிய நடந்தனர்.  இது இதயமுள்ள  இந்திய மக்கள் அனைவரையும் அழ வைத்து விட்டது.  இதயமில்லாதவர்களுக்கு கவலையில்லை. சாதாரணமாக இந்த காட்சியை கடந்து சென்றனர். 

ஜெயலலிதா எதிர்த்ததையெல்லாம் ஆதரிக்கும் அதிமுக அரசு

தமிழ்நாட்டின் மாநில அரசைப் பொறுத்தவரை, மத்திய அரசுக்கு அடிபணிந்து கிடக்கின்ற மாநில அரசாக மாறி விட்டது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, எதையெல்லாம் எதிர்த்தாரோ, அதை எல்லாம் எந்த வித கூச்சமுமின்றி ஏற்றுக் கொள்கின்ற அரசாக எடப்பாடி அரசு விளங்குகிறது. சரக்கு மற்றும் சேவை வரி, நீட் தேர்வு, மின் வாரிய மத்திய சட்டம், இட ஒதுக்கீடு, இந்தித் திணிப்பு மற்றும் மாநில உரிமைகளில் மத்திய அரசின் தலையீடு ஆகியனவற்றிற்கு எதிராக மூச்சுவிடக்கூட அஞ்சும் அரசு இது.  எட்டு வழிச்சாலைத் திட்டத்தில், மாநில கல்விக் கொள்கையில், கொரோனா மருத்துவம் மற்றும் நிவாரணம் ஆகியவற்றில், தோல்வியை சந்திக்கிறது. கொரோனா தொற்றின் தொடக்கத்தில், அக்கறையுள்ளவர்கள் போல் காட்டிக் கொண்ட அரசு, நாளாவட்டத்தில், மக்களைக் கைவிட்டுவிட்ட கடவுளுக்கு தான் தெரியும் என கைவிரித்து விட்டது. அதேநேரத்தில் எதிர்க்கட்சியினரை வேட்டையாடுவதிலும், போராடும் மக்களைக் கைது செய்வதிலும் மும்முரமாக இருக்கிறது. மத்திய அரசு மற்றும் பாரதிய ஜனதாவுக்கு எதிரான போராட்டங்களில், கைது நடவடிக்கையை துரிதப்படுத்துவதும் நடைபெறுகிறது. மத்திய அரசின் தவறான கொள்கை எதையும் தட்டிக் கேட்க முடியாத, மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாத அரசாக உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வைப் பொறுத்தவரை, கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகள், எதிர்க்கட்சிகள் என அனைவரும் இணைந்து நின்று எதிர்த்ததால், தப்பித்தனர் மாணவர்கள்.   

மத்திய அரசின் விருப்பத்திற்கிணங்க, மக்களின் போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன. அரசு ஊழியர்களின் சம்பளப் பிடித்தம்; அகவிலைப்படி பிடித்தம்; விடுப்பு ஒப்படைப்பு ஊதியப் பிடித்தம்; ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி பிடித்தம்; இரு ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினரில், ஒருவருடைய குடும்ப ஓய்வூதியத்தை நிறுத்த விரும்புதல்; குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களில், சிறுபான்மை மக்களை வேட்டையாடுதல்; சிறுபான்மை மக்களை ஆதரிக்கும் கட்சி தோழர்களை கைது செய்தல் ஆகியவற்றில், அரசனை மிஞ்சும் அரச விசுவாசியாக மத்திய அரசின் அடியாளாகச் செயல்படுகிறார்.

வெள்ளைக்காரன் காலத்து தேயிலைத் தோட்ட கங்காணிகளைப் போல், காடுகளையும், மேடுகளையும், பள்ளத்தாக்குகளையும் வெளிநாட்டு முதலாளிகளிடம் ஒப்படைத்து தலை முழுகி விட்டனர்.  இனி நாடும் நாமும்தான் பாக்கி.  தேசத்தை கூறுபோட்டு நாசம் விளைவிக்க முயல்கிறார்கள்.  நம்மைப் பட்டினி போட்டு பணியவைக்க முயற்சிக்கிறார்கள். நம்மை ஆத்திரமூட்ட அனைத்து வழிகளையும் கையாள்கிறார்கள். எந்த மனிதனும் தரையைத் தொடும்வரையில்தான் குனிய முடியும்.  ஆனால், அளவு மீறினால் குணம் மாறும் என்பதை அவர்களுக்கு நாம் தெரியப்படுத்த வேண்டும்.