tamilnadu

img

உறுதி மொழி ஏற்புடன் புதுச்சேரியில் ஒரு உணர்ச்சிமிகு பயணம்

இந்தியக் குடியரசு நாள் 2020,  ஜனவரி  26 காலை 7.30 மணி. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாண்புகளான மதச் சார்பின்மை,ஜனநாயகம், சோசலிசம் ஆகியவற்றிற்கு பேராபத்து வந்துள்ள சூழ்நிலையில், இந்தியச்  சமூகம் அதைப் பாதுகாக்க  உறுதி மொழி எடுத்துக் கொண்டிருக்கிறது. புதுச்சேரி யில் சமூக நல்லிணக்க இயக்கத்தின் சார்பில் காலை 7.30 மணிக்கு மோட்டார் சைக்கிளுடன் பிரச்சாரப் பயணம் தொடங்க ஆயத்தமாயினர். “அரசியல் அமைப்புச் சட்ட மாண்புகளைப் பாதுகாப்போம்”, “சமூக நல்லிணக்கத்தைப் பேணு வோம்”, “மதச்சார்பின்மை இந்தியச் சமூகத்தின் உயிர் மூச்சு” என்ற முழக்கங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வெண் கொடியுடன் பயணத்திற்கு தயாரானார்கள். அரசு ஊழியர் சம்மேளனத்தின் கவுரவத் தலைவர் சி.எச். பாலமோகனன் தலைமையேற்றார். பள்ளி பாதுகாப்பு இயக்கப் பொதுச் செயலர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, அரசியல் அமைப்பு சட்ட முகப்புரையை வாசிக்க பயணத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானோர் திரும்பச் சொல்லி உறுதி மொழி ஏற்றனர்.

புதுச்சேரி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர். சிவா, பிரச்சாரப் பயணத்தில் “இந்திய வசந்தமே எழுக” எனும் சிறு நூலை வெளியிட்டு கொடி அசைத்து பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கி வைத்தார். நூலின் முதல் பிரதிகளை பேராசிரியர் சையது இப்ராகிம், சம்மேளனப் பொதுச் செயலர் க. ராதா கிருஷ்ணன், மாதர் சங்கத் தலைவர் சந்திரா  ஆகியோர் பெற்றுக் கொண்டனர். எங்கள் நாட்டுக்கு  எந்த நாடு ஈடு, எங்கள் தேசம் இந்திய தேசம் போன்ற பாடல்களை புதுச்சேரி சப்தர்ஹஷ்மி கலைக் குழுவினர் இசைக்க பயணம் தொடங்கியது. இப்பயணத்தை எஸ்.ராமச்சந்திரன், ஆலிஸ் தாமஸ், பசீர் அகமது, பிரேமதாசன், கிறிஸ்தோபர், மேகலாதேவி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.  

50 கிராமங்கள், 22 மையங்கள்

கலைக்குழுப் பிரச்சாரவேன் முன் செல்ல மோட்டார் சைக்கிள்கள் அணிவகுத்தது அனை வரின் கவனத்தையும் ஈர்த்தது. அரசு ஊழியர்கள், பெண்கள், இளைஞர் அமைப்பினர் பயணத்தில் பங்கேற்றனர். இஸ்லாமிய இயக்கங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

பயணத்தின் முதல் மையம் முதலியார் பேட்டை. ஆலைகளும் ஆலைத் தொழிலாளர் களும் நிறைந்த பகுதி. இப்பகுதி ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளால் களையிழந்து போனதை விளக்கி பிரச்சாரப் பயணம் கடந்து சென்றது. இஸ்லாமிய இளைஞர்கள் பயண வழியிலேயே முழக்கங்கள் அடங்கிய வண்ணப் போஸ்டர்களை உடனுக்குடன் தயார் செய்து பய ணத்தின் நோக்கத்திற்கு வலுசேர்த்தனர். வழி நெடுகிலும் கிராமங்கள் தோறும் குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரச்சாரக் குழுவை வரவேற்றனர்.  கிருமாம்பாக்கம், கன்னிக்கோயில், சோரியாங்குப்பம், குருவிநத்தம், பாகூர் வழியாக சேலியமேடு கிராமத்தைச் சென்றடைந்தது. அறங்காவலர் குழுத் தலைவர், ஆசிரியர் அரிகரன் தலைமையில் குழுவினர்களுடன் ஊர் பெரிய வர்கள், கிராமத்தினர் அனைவரும் வரவேற்றனர். சமூகத்தின் ஒற்றுமையை, நல்லிணக்கத்தை இந்த வரவேற்பு பிரதிபலித்தது. அடுத்து அரங்கனூரில் சமம் பெண்கள் அமைப்பினர், குழந்தைகளுடன் குடியரசு தின கொண்டாட்டமாய் பயணக் குழுவை வரவேற்றனர்.

பயணத்திலேயே தொழுகை ...

பயணம் மதியம் ஒரு மணி அளவில் கரிக்கலாம்பாக்கம் கிராமத்தை வந்தடைந்தது. இஸ்லாமிய மக்களின் தொழுகை நேரம் நெருங்கி யது. பயணத்தில் பங்கேற்ற இஸ்லாமிய மக்கள் தொழுகையை பயணத்திற்கு எவ்வித தடையும் இல்லாமல் பயண வழியில் கரிக்கலாம்பாக்கம் பள்ளிவாசலில் நடத்தினர். மற்றவர்கள் அப்பகுதி யில் நூல் விற்பனையும், துண்டுப் பிரசுர விநியோகத்தையும், நோக்கங்களை விளக்கிப் பரப்புரையும் செய்தனர். அனைத்துப் பிரிவினரின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து, அதே சமயத்தில் பயணத்தையும் திட்டமிட்டு செய்தது பங்கேற்ற அனைவரையும் வியப்படையச் செய்ததோடு படிப்பினையையும் கற்றுக் கொடுத்தது. அடுத்து புதுச்சேரியில் அதிக அளவில் இஸ்லா மியர்கள் வாழும் சுல்தான் பேட்டை கிராமத்தை ஜமாத் குழுவினரின் அன்பான வரவேற்புடன் கடந்து சென்றது. முன்னதாக வில்லியனூர், உறுவையாற்றில் சுல்தான் பேட்டை இளைஞர் களின் மனநிறைவான உபசரிப்பு.

மதசார்பற்ற, இடதுசாரி இயக்கங்களின் ஆதரவு

மேட்டுப்பாளையத்தில் பயணக் குழுவை வரவேற்று, வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலர் ஆர்.ராஜாங்கம் தனது உரையில், “இஸ்லா மிய ஜனநாயக இயக்கங்கள் இடதுசாரிகளுடன் இணைந்து போராட வேண்டியது காலத்தின் கட்டாயம். தற்போது வந்திருக்கும் ஆபத்தை எதிர்கொள்ள இணைந்து பணியாற்றுவோம்’’ என்று குறிப்பிட்டார். நடுத்தர வகுப்பினரும் அரசு ஊழியர்களும் வசிக்கின்ற லாஸ்ப்பேட்டையில் நல்லதொரு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு வாழ்த்துரை வழங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிச் செயலர் அ.மு. சலீம், “இடதுசாரிகளும், தேசிய இயக்கமும், இஸ்லாமிய ஜனநாயக இயக்கமும் இணைந்து போராடிப் பெற்றது இந்திய நாட்டின் விடுதலை. அந்த வரலாற்றை மீட்டெடுத்து தற்போது வந்திருக்கும் பேராபத்தை எதிர்கொள்வோம்” என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரி நகர பகுதியின் முக்கிய வீதிகள் வழியே அணிவகுத்த மோட்டார் சைக்கிள் பேரணி சாரம், இலக்கிய பேராசான் ஜீவா சிலை அருகில் நிறைவு பெற்றது. நிறைவு விழாவில் பங்கேற்ற புதுவை முதல்வரின் நாடாளுமன்ற செயலரும் சட்டமன்ற உறுப்பினருமான க. லட்சுமிநாராயணன் தனது உரையில், “காஷ்மீர் மக்களும், அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் கடந்த ஆறு மாதங்களாக திறந்தவெளி கைதிகளாக கொடுந் துயரத்தில் சிக்கியுள்ளனர். முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கொடுமையால் வயோதிக நிலை க்குத் தள்ளப்பட்டுள்ளார். நீதிமன்ற தீர்ப்புகளும் நம்பகத் தன்மையாய் இல்லை. ஆட்சியாளர் களுக்கு பொருளாதார நெருக்கடி வேலையின்மை, விலைவாசி உயர்வு ஆகியன பற்றியெல்லாம் கவலையில்லை. மக்களை பதற்றத்தில் ஆழ்த்து கின்ற குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடி யுரிமை பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு அனைத்து சட்டங்களும் இந்திய மக்களை பிளவு படுத்தும். இவைகளின் ஆபத்துக் குறித்து கிராமப்புறங் களில் பிரச்சாரம் செய்து ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்த இந்த இயக்கத்திற்கு எனது  பாராட்டுக்கள்” என்று கூறி நிறைவு செய்தார்.

- எஸ்.ராமச்சந்திரன், புதுச்சேரி


 

;