தஞ்சாவூர்: காவிரி டெல்டாவில் விவசாய நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை திரும்பப் பெறவேண்டும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் செவ்வாய்க்கிழமை திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் சு.கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், செ.ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் (ஒரத்தநாடு) எம்.ராமச்சந்திரன், (கும்பகோணம்) சாக்கோட்டை க.அன்பழகன், (தஞ்சாவூர்) டி.கே.ஜி.நீலமேகம், முன்னாள் அமைச்சர் சி.நா.மீ.உபயதுல்லா மற்றும் பல்வேறு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் கூறியதாவது: 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை. சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற தேவையில்லை என இதற்கு பிள்ளையார்சுழி போட்டது தமிழக அரசுதான். தற்போது மத்திய அரசு அதையே பின்பற்றுகிறது. பெட்ரோலியத்துறை அமைச்சர் நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் புதிதாக எந்த ஒரு ஒப்பந்தமும் போட மாட்டோம் என வாக்குறுதி அளித்திருந்தார். ஒரு அமைச்சர் மக்களையிலும், மாநிலங்களவையிலும் வாக்குறுதி அளித்துவிட்டு அதுதொடர்பாக மாற்றுக் கருத்து கூறினால் அவை உரிமை மீறல் பிரச்சனைக்கு உரியதாகும்” என்றார்.