tamilnadu

img

தஞ்சாவூரில் இன்று விவசாயிகள் எழுச்சி...

புதுதில்லி/தஞ்சாவூர்:
வேளாண் சட்டங்களையும் மின்சாரச் சட்டத்தையும் முற்றாக ரத்துசெய்ய வலியுறுத்தி ஒரு மாத காலத்திற்கும் மேலாக தில்லியை முற்றுகையிட்டு போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மோடி அரசைகண்டித்தும் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தஞ்சாவூரில் டிசம்பர்29 (இன்று) பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும்போராட்டக் கூட்டம் நடைபெறுகிறது.முன்னதாக ஞாயிறன்று நாடு முழுவதும், பிரதமர் மோடி மனதின் குரல்நிகழ்ச்சியை ஒலிபரப்பிய அதே சமயத்தில், அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு உட்பட விவசாய சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க, நாடு முழுதும் ஆயிரம் இடங்களில் தொழிலாளர்களும் விவசாயிகளும் இணைந்து தங்கள் கோபத்தை வெளிக்காட்டும் விதத்தில் மணியோசை எழுப்பி தங்கள் எதிர்ப்பினைத்தெரிவித்தனர்.

நாட்டின் பல பகுதிகளிலும் இந்நிகழ்ச்சியில் கிராமப்புற இளைஞர்கள் பெரும் திரளாகக் கலந்துகொண்டு அரசுக்கு எதிரான கொந்தளிப்பை வெளிப்படுத்தினார்கள்.இதுதொடர்பாக ஒருங்கிணைப்புக்குழு விடுத்துள்ள செய்தியில், “நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம், கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் கிராமப்புற பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சி ஆகியவற்றுக்கான திசை வழியை அவர்களுக்கு அளித்திருக்கிறது.   விவசாயிகள், வேளாண்கட்டமைப்பு வசதிகளுக்காகவும், உணவுப் பதப்படுத்தலுக்காகவும் அரசின் மூலதனத்தைக் கோரும் அதே சமயத்தில், அரசாங்கம் அதற்கு செவிமடுப்பதற்குப் பதிலாக, அதன்மூலம் விவசாயிகளின் வளர்ச்சிக்கு உதவுவதற்குப் பதிலாக, இந்திய விவசாயத்தில் கார்ப்பரேட்டுகளும், பன்னாட்டு நிதி நிறுவனங்களும் முதலீடு செய்வதற்கு உதவுவதற்காக அவர்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயைச்செலவு செய்திடத் திட்டமிட்டிருக் கிறது. இது நாட்டிற்கான சுய சார்பு கிடையாது. மாறாக இது நாட்டை அழித்திடும் பாதையாகும். இதற்கு எதிராக புத்தாண்டில் நாடு முழுதும்உள்ள மக்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக்கோரியும், 2020 மின்சார திருத்தச் சட்டமுன்வடிவை ரத்து செய்யக்கோரியும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அறைகூவல் விடுத்திருக்கிறது.

இதற்கிடையில் அதானி மற்றும்அம்பானி நிறுவனங்களின் பொருள்களையும், சேவைகளையும் பகிஷ்கரிப்பதற்கான பிரச்சாரமும் தொடருகிறது. இந்நிலையில் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் அறை கூவலுக்கிணங்க தஞ்சாவூரிலும், பீகாரிலும் மாபெரும் பேரணி/ஆர்ப்பாட்டங்கள் டிசம்பர் 29 அன்று நடைபெறுகின்றன. இதேபோன்று டிசம்பர் 30 அன்று மணிப்பூரிலும், ஹைதரா பாத்திலும் நடைபெறுகின்றன.தஞ்சாவூரில் மாபெரும் பேரணிநடைபெறும் என அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் பேரணிக்கு அனுமதி மறுத்து தமிழக காவல்துறை அராஜகம் செய்துள்ளது. அத்துடன் நில்லாமல், பிற மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தஞ்சாவூருக்குள் நுழையக்கூடாது என்றும் காவல்துறை சட்டவிரோதமான உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறது. மோடி அரசின் வேளாண் சட்டங்களை முட்டுக்கொடுத்து தூக்கிநிறுத்த முயற்சித்துவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அதிமுகஅரசு, காவல்துறையை ஏவி தஞ்சாவூர் பேரணியையும் போராட்டத்தையும் தடுத்து நிறுத்த முயற்சித்து வருகிறது. இதற்கு  விவசாயிகள் சங்கங் களின் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திட்டமிட்டப்படி பேரெழுச்சியுடன் தஞ்சையில் விவசாயிகள் கூடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.    (ந.நி.)

;