தஞ்சாவூர்:
டெல்டாவில் கஜாவை தொடர்ந்து, நிவர் புயல் தாக்கத்தின் அறிவிப்பை நினைத்து பீதியில் உறைந்து இருந்த நிலையில், புயல் கரையை கடந்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் நிம்மதியடைந்தனர்.
கடந்த 2018-ல் வீசிய கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 60 லட்சம் தென்னை மரங்கள் முறிந்தும், வீடுகள், படகுகள் ஆகியவை சேதமடைந்தன. இதனால் பொதுமக்களும், தென்னை விவசாயிகளும், மீனவர்களும் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர்.இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டாக போராட்டம் நிறைந்ததாக இருந்த வாழ்வாதார பிரச்சினைகளில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வந்தனர். அதன்படி தென்னை விவசாயிகள் பெரும்பாலும், இழந்த மரங்களுக்கு பதிலாக, புதிதாக தென்னங்கன்றுகளை வைத்து வளர்க்க துவங்கியுள்ளனர். மீனவர்கள் புதிதாக படகுகளையும், சேதமடைந்த படகுகளை சரி செய்தும் தொழிலை துவங்கினர். குடிசை வீடுகளை இழந்த பலரும், தற்போது வரையிலும் தார்பாய்கள் கொண்டே கூரையின் ஓட்டைகளை மறைத்து வாழ்ந்து வருகின்றனர்.
இப்படியான நிலையில், நிவர் புயல் அறிவிப்பால் டெல்டா மக்கள், கஜா கற்று தந்த பாடங்களால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கினர். இருந்தாலும், டெல்டா மக்கள் மனதில் அச்சம் அதிகளவில் இருந்தன. தொடர்ந்து, புதன்கிழமை இரவு நிவர் புயல் புதுச்சேரி, கடலூரை நோக்கி நகர்ந்த நிலையில், பெரிதும் நிம்மதியடைந்தனர்.
நாகையில் இயல்பு வாழ்க்கை திரும்பியது
நிவர் புயல் புதுச்சேரி, மரக்காணம் இடையே புதன் நள்ளிரவில் கரை கடந்ததால் நாகை மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டது. எனினும் மழை, பலத்த காற்றினால் ஆங்காங்கே வாழை மரங்களும் சிறிய மரங்களும் சாய்ந்தன. நாகைப் பகுதியில் புதிய நம்பியார் நகர், செல்லூர், அந்தணப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சுனாமி வீடுகள் மழை நீரில் சூழப்பட்டன. பேர்ந்துகள் புதன் காலையிலிருந்து இயங்கத் துவங்கின. இரண்டு நாட்களாக மூடப்பட்ட கடைகள் திறக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்வு திரும்பியது. ஆனாலும் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது.