tamilnadu

img

மழையினால் பயிர்கள் சேதம்... நிலத்திலேயே உயிரை விட்ட விவசாயி....

பட்டுக்கோட்டை:
மழையினால் பயிர்கள் சேதம் அடைந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி தன்னுடைய விவசாய நிலத்திலேயே உயிரிழந்த பரிதாபம் பட்டுக்கோட்டை பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பண்ணவயல் கிராமம் அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் விவசாயி வீராச்சாமி. இவர் தன்னுடைய வயலில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இப்பகுதியில் பெய்து வந்த பெருமழை காரணமாக இவருடைய விவசாய நிலத்தில் தண்ணீர் புகுந்து முழங்கால் வரை குளம் போல் தேங்கி நின்றது. தண்ணீரை வடிய வைக்க விவசாயி வீராச்சாமி கடந்த சில தினங்களாக மண்வெட்டியுடன் வயலில் போராடி வந்துள்ளார். ஆனாலும் முழுவதுமாக தண்ணீர் வடியாத நிலையில், கடன் பெற்று விவசாயம் செய்து வரும் நிலையில், பயிர்கள் சேதம் அடைந்தது கண்டு மனவேதனை அடைந்துள்ளார். 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் தன் வயலில் தண்ணீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வரப்பில் வந்து கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து அங்கேயே உயிரிழந்தார்.  வயலுக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை என அப்பகுதியில் உள்ளவர்கள், குடும்பத்தினர் தேடிச் சென்றபோது, தான் உயிரினும் மேலாய் நேசித்த வயலின் வரப்பிலேயே விவசாயி வீராச்சாமி தன்னுடைய உயிரை விட்டது தெரியவந்தது.  உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;