சிறப்பு அந்தஸ்து பிரச்சனையால் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரண்டு பகுதியாக (ஜம்மு - காஷ்மீர், லடாக்) பிரிக்கப்பட்டது. அரசியலில் இப்படி என்றால் விளையாட்டுப் பிரிவில் வரும் செப்டம்பர் 14, 15-ஆம் தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 55 ஆண்டுகளுக்குப் பிறகு டென்னிஸ் விளையாடப் பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய அணி செல்ல இருப்பதால் இந்த தொடரை இரு நாட்டு டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார்கள்.
ஜம்மு - காஷ்மீர் பிரச்சனையால் பாகிஸ்தான் அரசு இந்தியாவிற்கு எதிராக அரசியல் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் இந்திய வீரர்களுக்குப் பாகிஸ்தான் அரசு விசா வழங்குவது சந்தேகம் தான். மேலும் பாதுகாப்பு பிரச்சனையைக் காரணம் காட்டி மத்திய அரசு அனுமதி அளிக்குமா? என்பது தான் இருநாட்டு ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், மத்திய அரசு பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது, “பாகிஸ்தான் உடனான இருதரப்பு போட்டிகளுக்கு இந்திய அரசிடம் இருந்து அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்றாலும், பாகிஸ்தானில் நடைபெறவிருப்பது (டேவிஸ் கோப்பை) சர்வதேச போட்டி என்பதால் இதில் மத்திய அரசு தனிப்பட்ட முறையில் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க முடியாது” எனக் கூறியுள்ளார். கிரண் ரிஜிஜு-வின் கருத்தால் இந்திய டென்னிஸ் அணி 55 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்குச் செல்வது உறுதியாகிவிட்டது. பாகிஸ்தான் அரசின் விசா பிரச்சனை உள்ளது.