சேலம்:
சமீபத்தில் நீலகிரி மலை ரயில் தனியார் நிறுவனத்துக்காக மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை இயக்கப்பட்டது. இதற்காக, தலைக்கு 3,000 கட்டணம் என 4.80 லட்சத்தை அந்த தனியார் நிறுவனம் கட்டியது. வலைதளங்கள் மற்றும் நாளேடுகளில் வைரல் ஆனது.
இதனை அடுத்து, சேலம் கோட்ட அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். “விமானங்களை வாடகைக்கு எடுத்து பயணிப்பது போல அந்த தனியார் நிறுவனம் வாடகைக்கு எடுத்து மலை ரயிலை பயன்படுத்தியது. நாங்கள் ரயில் டிரைவர், உதவி டிரைவர்களை மட்டுமே அனுப்புவோம் . சினிமா படங்கள் சூட்டிங் நடப்பதும் இப்படித்தான்.நீலகிரி மலை ரயில் தனியார் வசமானது என்பது தவறான பதிவு. ரயில்வே துறையின் கொள்கைபடி, எந்த ஒரு தனி நபர் வேண்டுமானாலும் ஒரு ரயிலையோ அல்லது ஒரு பெட்டியையோ “முழு கட்டண வீதம்” என்ற முறையில் ஒரு குழுவுக்காக அல்லது திருமண நிகழ்ச்சிக்காக பணம் செலுத்தினால் அவர்களுக்காக பிரத்யேகமாக இயக்கப்படும். இது ஒப்பந்த பயணம் அல்லது தனியுரிமை பயண வசதி என்று அழைக்கப்படும். இதற்கு முன்பு ரயில்வே இது போல் பல தனியுரிமை பயண வசதிகளை இயக்கி உள்ளது. அத்தகைய தனியுரிமை பயண வசதி முறையிலேயே மலை ரயில் டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் தனியார் நிறுவனத்தின் விண்ணப்பத்தின் படி இயக்கப்பட்டது.
இதையடுத்து நீலகிரி மலை ரயில் தனியார் மயமாக்கப்பட்டு விட்டதாக முற்றிலும் தவறான, புரிதல் இல்லாத பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஒப்பந்த பயணம் அல்லது தனியுரிமை பயணத்துக்கும் ரயில்வேயின் வழக்கமான சேவைக்கும் எந்த சம்பந்தம் இல்லை. ரயில்வேயின் வழக்கமான சேவைகள் கோவிட்-19 ஐ கருத்தில் கொண்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மலை ரயிலை இயக்க உரிய அனுமதி வந்த பிறகு பொது மக்களுக்காக ஏற்கனவே இருந்த கட்டணத்தின் அடிப்படையில் இயக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளனர்.