tamilnadu

img

காலவரையற்ற போராட்டம்... லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

சேலம்:
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில்தமிழகத்தில் லாரி உரிமை யாளர்களுக்கு விதிக்கப்படும் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கண்டித்து டிச.27 ஆம் தேதியன்று நடைபெற உள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் வெளி மாநில லாரிகள் தமிழகத் திற்குள் நுழையாது என தென் மாநிலலாரி உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.இதுதொடர்பாக சேலத்தில்தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொது செயலாளர் சண்முகப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், லாரிகளுக்கான வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் தமிழகத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதுவும், கர்நாடக மாநிலத்தில்  ரூ.1500க்கு விற்கும் கருவிகள், தமிழகத்தில் ரூ.8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தப்படுகிறது. இதேபோன்று ஜிபிஎஸ் கருவிகளையும், ஒளிரும் ஸ்டிக்கர்களையும் குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்வதால் தமிழக லாரி உரிமையாளர்களுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து பல முறை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்களின் கோரிக்கையை நிறைவேற்றிட வலியுறுத்தி டிச.27ஆம் தேதியன்று முதல் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், அன்று முதல் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தில் இருந்தும் தமிழகத்திற்குள் லாரிகள் நுழையாது என்றும், மாநில எல்லையிலேயே நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.மேலும், இந்த கருவிகளை தர நிர்ணயம் பெற்ற 49 நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதனையும் மீறி குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்று கூறுவதால் இதில் உள்நோக்கம் உள்ளது என்று சந்தேகிக்கிறோம். குறிப்பாக, இந்த கருவிகள் வாங்க கூறுவதில் பல ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்து இருக்கலாம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

விவசாயிகளுக்கு ஆதரவு; இன்று லாரிகள் ஓடாது 
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறுகையில், புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 8 செவ்வாயன்று நடைபெறும் பாரத் பந்த்தில், தமிழக லாரி உரிமையாளர்கள் முழுமையாக பங்கேற்க உள்ளதாகவும், நாளை காலை முதல் இரவு வரை எந்த லாரிகளும் இயங்காது எனத் தெரிவித்தார்.

;