tamilnadu

img

சட்டமன்றத்தை முற்றுகையிடுவோம்.... சென்னை ஆர்ப்பாட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு...

சென்னை:
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தையும் முற்றுகையிடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரித்துள் ளார்.

கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதாயம் பெறும் வகையிலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனையொட்டி அனைத்து விவசாய அமைப்புகளின் சார்பில் டிசம்பர் 8 பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்ட த்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். திமுக மாவட்டச் செயலாளர் ம.சுப்பிரமணியம், அரவிந்தரமேஷ் எம்எல்ஏ, சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், மாநிலக்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், ஆர்.வேல்முருகன், வெ.ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கே.பால கிருஷ்ணன் பேசியது வருமாறு:

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 சட்டங்களை எதிர்த்து கடுங்குளிரிலும் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு கனடா பிரதமர், ஐ.நா.மனித உரிமைகள் பிரிவு தலைவர், இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு ஆதரவாக பேசுகிறார். மோடி தலையில் இடி விழும் வகையில் போராட்டம் நடக்கிறது. ஆடி காற்றில் அம்மியே பறக்கும்போது எடப்பாடி எம்மாத்திரம்!
மத்திய அரசு சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை விட நகர்ப்புறமக்களுக்கு அதிக பாதிப்பை உரு வாக்கும். அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் பதுக்கலையும், கடும் விலையேற்றத்தையும் நியாயப்படுத்துகிறது. இதுமுதல்வருக்கு புரியாதா? மோடிக்கு அடிமையாக இருப்பதால் புரியாதது போல் உள்ளார்.விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை அரசு கொள்முதல் செய்யவில்லையெனில், இந்திய உணவுக்கழகம் மூடப்பட்டால், ரேசன் கடை முறை அழியும். தமிழகத்தில் ஏழை மக்களுக்கு கிடைக்கும் 20 கிலோ இலவச அரிசியை பறிக்க முயற்சிக்கிறார்கள். மின்சார திருத்தச்சட்டத்தின் வாயிலாக ஒவ்வொருதுணை மின்நிலையத்தையும் தனியாருக்கு கொடுத்துவிட்டு, இலவச மின்சாரத்தை நிறுத்தப்போகிறார்கள். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 சட்டங்களில் உள்ள நியாயத்தை விளக்கி பாஜக போராட்டம் நடத்தினால் அதனை எதிர்க்கட்சிகள் எதிர்கொள்ள தயாராக உள்ளன.கிராமங்கள் தோறும் போராட்டங்கள் நடக்கின்றன. மத்திய அரசு சட்டத்தை நிறைவேற்றும் முன்பாகவே, அந்த சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இந்த சட்டங்களை திரும்பப் பெறாவிடில் கிராமங்களில் போராட்டத் தீ பற்றி எரியும்; தில்லியைப் போன்று சட்டமன்றத்தையும் முற்றுகை யிடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

;