சென்னை:
ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கி, விரைந்து முடிக்க வலியுறுத்தி டிசம்பர் 3 அன்றுஅனைத்து போக்குவரத்துக் கழக அலுவலகங்களிலும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு வழங்குகின்றனர்.போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் செவ்வாயன்று (டிச.1)சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு, எல்பிஎப், ஏஐடியுசி, எச்எம்எஸ், ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், எம்எல்எப், ஏஏஎல்எல்எப், டிடபிள்யூயு ஆகிய 9 சங்கங்களின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை அடியொற்றி நடக்கும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களை சீரழித்து வருகிறது. 1972ஆம் ஆண்டு 3000 பேருந்துகளுடன் ஆரம்பிக்கப்பட்ட போக்குவரத்துக் கழகங்கள் 320 பணிமனைகள், 22 ஆயிரம் பேருந்துகளுடன் செயல்பட்டு வந்தன. தற்போது 19 ஆயிரம்பேருந்துகளே இயக்கப்படுகின்றன. பயணிகள் எண்ணிக்கை 2.10 கோடியிலிருந்து 1.60 கோடியாக குறைந்துள்ளது.கொரோனா ஊரடங்கிற்கு பிறகு சுமார் 13 ஆயிரம் பேருந்துகளே இயக்கப்படுகின்றன. பயணிகள் எண்ணிக்கையும் ஒரு கோடியாக சுருங்கியுள்ளது. இதனை பயன்படுத்தி போக்குவரத்துக் கழகங்களை சீரழிக்க அரசு முயற்சிக்கிறது. ஊரடங்கு சமயத்தில் போக்குவரத்துக் கழக வழித் தடங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க மோட்டார் வாகன சட்டத்தில் 288 (எ) என்ற புதிய விதி உருவாக்கியது. அனைத்து தொழிற்சாலைகளும் முழுமையாக செயல்படலாம் என அரசு அறிவித்த பின்பும், போக்குவரத்துக் கழகங்கள் பேருந்துகளை முழுமையாக இயக்காமல், போக்குவரத்துக் கழகங்களைப் பலவீனப்படுத்தி வருகிறது.மேலும், போக்குவரத்துக் கழகங்களை சீரழிக்கும் தமிழக அரசானது, ஊழியர்களது பிரச்சனைகளைத் தீர்க்கவும் முன்வரவில்லை. அரசு போதுமான நிதி வழங்காமல் தொழிலாளர்களது பணத்தை வைத்து போக்குவரத்துக் கழகங்களைஇயக்கும் அநீதி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி அளிக்க வேண்டும். ஊழியர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2017ஆம் ஆண்டு வேலைநிறுத்தம் நடைபெற்றது. 3 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்திகழகங்களின் நிதிப் பிரச்சனைகளும், ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். அரசு 3ஆண்டுகளாக வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.லெட்டர் பேடு சங்கங்களைப் பயன்படுத்தி 2018ஆம் ஆண்டு ஊழியர்களைப் பாதிக்கும்அடிப்படையிலான ஒப்பந்தத்தை உருவாக்கியது. இதற்கு எதிராக நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் நீதிமன்றம் தலையிட்டது. அதையொட்டி வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. நீதிமன்றத்திலும் பிரச்சனைகள் தீரவில்லை.
எனவே, தமிழகத்தில் பொதுப்போக்குவரத்தை வலுப்படுத்த வேண்டும், தமிழக அரசுபோக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவிற்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும், அனைத்துப் பேருந்துகளையும் முழுமையாக இயக்க வேண்டும், போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகம் பயன்படுத்திய ஊழியர்களின் பணம் சுமார் ரூ. 7000 கோடியை உரியகணக்கில் செலுத்த வேண்டும், மாதாமாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் தொகையை உரிய கணக்கில் செலுத்த வேண்டும். ஓய்வுபெற்றஉடன் ஊழியர்களின் பணப்பலனை வழங்க வேண்டும். 2018 ஏப்ரல் முதல் 2019 ஏப்ரல் வரைஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வுகால பலனை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும்.போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய ஒப்பந்தத்தை தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதிப்படுத்த வேண்டும், ஊதிய வஞ்சனையை சரி செய்ய வேண்டும், ஒன்றரை ஆண்டுகள் அகவிலைப்படியை நிறுத்திவைப்பது என்ற அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும், அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும், தன்னிச்சையான போனஸ் குறைப்பைக் கைவிட வேண்டும், 2019-2020 ஆம் ஆண்டிற்கு 20 சத போனஸ் சட்டப்படி கணக்கிட்டு வழங்க வேண்டும். தொழிலாளர்துறை முன்பு நிலுவையிலுள்ள அனைத்து கோரிக்கைகளையும் பேசி தீர்வுகாண வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும், 1.4.2003க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களையும், கழக ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும், கொரோனா காலத்தில் ஊதியம் வழங்கியதில் உள்ள குளறுபடிகளை, விடுப்பு - ஊதிய பறிப்பை முறைப்படுத்த வேண்டும் ஆகிய 12 கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 3 அன்று அனைத்து கழகங்களிலும்வேலைநிறுத்தம் அறிவிப்பு வழங்கப்படும்.
வேலைநிறுத்தம்
டிசம்பர் 7 முதல் மண்டல தலைமையகங்களில் பிரம்மாண்ட வாயிற்கூட்டங்கள் நடத்தப்படும், டிசம்பர் 11, 12 தேதிகளில் அரசியல்கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள், சகோதர தொழிற்சங்கங்களை சந்தித்து ஆதரவு கேட்கப்படும். டிசம்பர் 14, 15 தேதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கம்நடத்தப்படும்.இவற்றின் மீது அரசு உரிய தீர்வு காணாவிட்டால், டிசம்பர் 17ஆம் தேதி அல்லது அதற்கு பின் ஆறு வார காலத்திற்குள் வேலைநிறுத்தம் நடைபெறும்.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு
மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த சில நாட்களாக விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டுள்ளனர். அந்த போராட்டத்திற்கு தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் பேராதரவை தெரிவித்துக் கொள்கின்றனர்.