tamilnadu

100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.1229 கோடி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை, மே 17 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்குவதற்காக இந்த ஆண்டுக்கு ரூ. 1229.04 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் செந்தில்குமார் இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார்.

ஒன்றிய அதிகாரமளித்தல் குழுவின் கூட்டம் கடந்த மார்ச் 27 அன்று நடைபெற்றது. இக்குழு கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இந்த 2024-25 ஆம் ஆண்டில்  தமிழகத்தில் 20 கோடி மனித நாட்களை அனுமதிக்கும் தொழிலாளர் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. மேலும், நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.319 ஊதியம் வழங்கவும் ஒப்புதல் பெறப்பட்டது.

இதையடுத்து, திட்டத்தில் இருந்த நிலுவைத் தொகை உட்பட ரூ. 921 கோடியே 78 லட்சத்து 22 ஆயிரம் நிதியை தமிழகத்திற்கு கடந்த ஏப்ரல் 25 அன்று  ஒன்றிய அரசு ஒதுக்கியது.

இதைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், ஒன்றிய அரசின்  75 விழுக்காடு நிதியான ரூ. 921 கோடியே 78 லட்சத்து 22 ஆயிரத்துடன், மாநில அரசின் 25 விழுக்காடு நிதியான ரூ. 307 கோடியே 26 லட்சத்து 7,333 என ரூ. 1229 கோடியே 4 லட்சத்து 29 ஆயிரத்து 333 ஐ பயன் படுத்த ஒப்புதல் அளிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார். அதனைக் கவனமாக பரிசீலித்து தமிழக அரசு, இந்த நிதியை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது என்று ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.