வியாழன், மார்ச் 4, 2021

tamilnadu

img

இசை உலகின் மகத்தான கலைஞர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்... திரைக்கலைஞர்கள்-அரசியல் கட்சியினர் இரங்கல்

சென்னை:
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல திரையிசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ( வயது 74) சிகிச்சை பலனின்றி வெள்ளியன்று பிற்பகலில்உயிரிழந்தார். இத்தகவலை அவரது மகன் எஸ்பிபி. சரண் தெரிவித்தார். உடல்நலக்குறைவால் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது  உடல்நிலைதொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகஎம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் வியாழனன்று மாலை 6.30 மணியளவில் அறிக்கை வெளியிட்டது.   வெள்ளியன்று பிற்பகல் 1.04 மணிக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார் என்று வெங்கட் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இதையடுத்து மருத்துவமனை முன்பு வெள்ளியன்று எஸ்பிபி மகன் சரண் செய்தியாளர்களிடம் கூறுகையில், எம்ஜிஎம் மருத்துவக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அப்பாவின் பாடல்கள் இருக்கிற வரைக்கும் அவர் பெயர் இருக்கும். நீங்கள் எல்லோரும் இருக்கிற வரைக்கும் அப்பா எங்களுடன் இருப்பார். எல்லோருக்கும் நன்றி என்று   கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனாஇல்லை என்று ரிசல்ட் வந்ததாக வெள்ளி யன்று  காலை எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

எஸ்.பி.பி. மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் மற்றும் திரைக்கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் 1946-ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி  எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிறந்தார்.  1969-ஆம் ஆண்டு சாந்தி நிலையம் படத்திற்கு ‘இளையகன்னி’ என்கிற பாடலைப் பாடி தமிழில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். 

மின்சாரக்கனவு திரைப்படத்தில்  ‘தங்கத் தாரகை மகளே’ என்கிற பாடலுக்காக  தேசியவிருதைப் பெற்றவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என  நான்கு மொழிகளில் பாடியுள்ளார். இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளையும்  ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை பெற்றுள்ளார். உலகிலேயே அதிகமான திரைப்படப் பாடல்கள் பாடிய பாடகர் என்கிற கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளார்.  ‘இந்தியன் பிலிம் பர்சனாலிட்டி ஆஃப் தி இயர்’ விருதை 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற  47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பெற்றார். சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்துள்ளார்.

;