வியாழன், ஜனவரி 21, 2021

tamilnadu

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு அரசு நிதியுதவி

சென்னை, ஏப்.24-காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-நாமக்கல் மாவட்டம், பொத்தனூர் கிராமம், பெரியண்ணன் கோவில் சந்து பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் அவருடைய குடும்ப நண்பர்கள் என 6 நபர்கள் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர் பாராத விதமாக நீரில் மூழ்கியதில் சரவணன், அவருடைய மனைவி ஜோதி மணி, மகன்கள் தீபகேஷ், சாரகேஷ் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி தேவி ஆகிய 5 பேரின் உடல்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டன. அந்த 5 பேரின் குடும்பத்திற்குஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ள முதலமைச்சர், இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 5 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.காவிரி ஆற்றில் மூழ்கிய செல்வி ஹர்சிகாவை தேடும் பணியில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் வருவாய் துறையினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, கோடை விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு நீர் நிலைகள், ஆறுகள் மற்றும் ஏரிகளில் குளிக்கச் செல்லும் போது, காவல் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினரால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே குளிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறது.

;