tamilnadu

img

மதநல்லிணக்கத்தை சிதைக்க முனையும் பாஜகவிற்கு தமிழக அரசு துணைபோக வேண்டாம்... மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தல்

சென்னை:
மதநல்லிணக்கத்தை சிதைக்க முனையும் பாஜகவிற்கு தமிழக அரசு  துணைபோக வேண்டாம் என்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன் மற்றும் க. உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை:

இராமநாதபுரம் மாவட்டத்தில் அருண் பிரகாஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டதற்கு மதச் சாயம் பூசி மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கும் வேலையில் பாஜகவின் தேசியச் செயலர் எச். ராஜா ஈடுபட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவரின் சாதியை குறிப்பிட்டும், கொலையாளிகள் அனைவரும் சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்கள் என்றும் ஒரு விஷமத்தனமான பதிவைப் போட்டுள்ளார். இதை அக்கட்சியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கமும், வேறு சில நிர்வாகிகளும் எதிரொலித்துள்ளனர்.ஆனால் இந்தப் படுகொலை மதப்பிரச்சனை காரணமாக நடந்தது அல்ல, கொலையாளிகள் பல மதங்களைச் சார்ந்தவர்கள், இருகோஷ்டிகளுக்கு இடையே இருந்த தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்திருக்கிறது என்று மாவட்ட காவல்துறை ஒரு பதிவின் மூலமாக மக்களுக்குச் சொன்னது. அதை மேற்கோள் காட்டி அந்த மாவட்ட எஸ். பி. வருண் குமார் அவர்களும் “வதந்திகளையும் பொய்ச் செய்திகளையும் நம்ப வேண்டாம்” என்று மக்களைக் கேட்டுக் கொண்டார்.அப்படியும் பாஜகவும் அதன் நிர்வாகிகளும் தங்களது விஷமப் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை, அந்தப் பதிவுகளை நீக்கவில்லை. இது அந்தப் பகுதியில் நிலவும் மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிப்பது என்பதால் ஃபிரண்ட்லைன் ஏடு இதைச் சுட்டிக்காட்டி செய்திக் கட்டுரை வெளியிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்களும் மதப்பகைமையை மூட்ட நினைக்கும் பாஜக நிர்வாகிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதினார். அதில்,  தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலைகளுக்கு மதச்சாயம் பூச பாஜக கடந்த காலங்களிலும் முயன்றதைப் பட்டியலிட்டிருந்தார்.

மதப்பதற்றம் ஏற்படக் கூடாது எனக் கவனமாகச் செயல்பட்ட மாவட்ட எஸ். பி. வருண்குமாரை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கி காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது தமிழக அரசு. இது, தமிழக மக்கள் ஒற்றுமை மேடைக்கு மட்டுமல்லாது மதநல்லிணக்கத்தை விரும்பும் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாது குழியையும் பறித்த கதையாக உள்ளது. பிற காவல்துறை அதிகாரிகளுக்கு இது விடுக்கும் செய்தி மிக மோசமானதாகும், அவர்களை வகுப்புவாத சக்திகளுக்கு துணைபோகுமாறு சாடை காட்டுவதாகும்.

மதக் கலவரத்தை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அதைத் தடுக்க முனையும் காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திருப்பதுதமிழக அரசு, பாஜக தரும் நிர்ப்பந்தத்திற்கு பணிந்துபோகிறது எனும் எண்ணத்தையே வலுவாக ஊட்டுகிறது. இதனால் அந்தப் பகுதியில் மக்கள் ஒற்றுமை சிதையுமேயானால் அதற்கு பாஜக மட்டுமல்லாது தமிழக அரசும் பொறுப்பாகும் என்பதை மக்கள் ஒற்றுமை மேடை சுட்டிக்காட்டுகிறது.தமிழகம் மதநல்லிணக்க மரபைக் கொண்டது, ஒப்புநோக்கில் இங்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு அது அடித்தளமாகும். அதை தகர்க்கப் பார்க்கின்றன மதவெறி சக்திகள். அவற்றுக்கு இடம் கொடுக்க வேண்டாம், மக்கள் ஒற்றுமையை சிதைக்கும் வேலைகளுக்கு துணைபோக வேண்டாம் என்று தமிழக அரசை மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்துகிறது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து மக்களின் சுமூக வாழ்வைப் பராமரிக்க வேண்டியது அரசியல் சாசனம் தந்துள்ள கடமை என்பதையும் அரசுக்கு நினைவூட்டுகிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;