சென்னை:
தமுஎகச துணை பொதுச் செயலாளர் தோழர் எஸ்.கருணா மறைவுக்கு தமுஎகச கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளது.
தமுஎகச மாநில தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளரும் அமைப்பின் முழு நேர ஊழியருமான தோழர்.எஸ்.கருணா என்கிற ‘கருப்புகருணா’ உடல்நலக் குறைவு காரணமாக திங்களன்று (21.12.2020) இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருடைய மறைவு தமுஎகசவுக்கு மட்டுமின்றி தமிழக முற்போக்கு கலை இலக்கிய உலகிற்கே பேரிழப்பாகும்.1984 இல் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் பயிலும்போது நடைபெற்ற கல்லூரி மாணவர்பேரவை தேர்தலில் மாணவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.பின்னர் தமுஎச அமைப்போடு தன்னை இணைத்துக் கொண்டு தீவிர இடதுசாரி சிந்தனைகளைப் பரப்பும் சமரசமற்ற கலைஞனாக நாடகத் துறையில் இயங்கினார்.1990களில் தீட்சண்யா நாடகக்குழுவை உருவாக்கி முற்போக்கு நாடக செயல்பாடுகளை முன்னெடுத்தார்.“ஏழுமலை ஜமா” என்ற குறும்படத்தை இயக்கி இயக்குநராகவும் பரிணமித்தார்.தமிழக இடதுசாரி இயக்க முன்னோடி ஐ.மாயாண்டி பாரதி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக உருவாக்கி கொண்டிருந்தார்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் அடையாளமாகத் திகழும் கலை இரவு பொது மேடைகளில் விடிய விடியநிகழ்வதற்கு காரணமானவர்களில் முதன்மையானவர் தோழர் கருணா.தமுஎகசவின் “திரை இயக்கம்” பிரிவின் பொறுப்பாளராக தொடர்ந்து இயங்கி புதுவைபல்கலைக் கழகத்தோடு சேர்ந்து பல்வேறு உலக திரைப்பட விழாக்களை நடத்தியதோடு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒருங்கிணைத்தவர்.
உலகத் திரைப்படம் குறித்த திரைவிமர்சனநூலான “போடம்கின் கப்பலும் போக்கிரித் திருடனும்” நூலை எழுதியவர். சமூக ஊடகங்களில் பாசிச மதவெறி சக்திகள் மற்றும் சாதி வெறி சக்திகளின் சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர். போலி சாமியார் நித்தியானந்தா கும்பலின் மிரட்டலையும் அஞ்சாமல் எதிர் கொண்டவர். கொரோனா காலத்தில் அமைப்பின் சார்பில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு இணைய வழி நிகழ்வுகளை ஒருங்கிணைத்தவர்.தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அறிவொளிஇயக்கங்கள் மூலமும் தொடர்ந்து களத்தில் செயல்பட்டவர்.திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளராகவும் சில காலம் பொறுப்பு வகித்தவர்.தொடர்ச்சியாக முற்போக்கு கருத்துகளை சமரசமின்றி களமாடிய தோழர் கருப்பு கருணாமறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கலைஞர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து வாடும் மனைவி, மகன், மகள்ஆகியோருக்கு தன்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.