tamilnadu

img

புயல் பாதிப்பு: மத்திய குழு இன்று ஆய்வு...

சென்னை:
சென்னை வந்துள்ள மத்திய குழு புயல் பாதித்த மாவட்டங்களுக்கு 2 பிரிவாக சென்று பார்வையிடுகின்றனர்.வங்கக் கடலில் உருவான நிவர் புயல் கடந்த 26ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 18 மாவட் டங்களில் சேதத்தை உருவாக்கியது.இந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்துக்குள் புரெவி புயல் உருவாகி கன்னியாகுமரி-ராமேசுவரம் இடையே கரையை கடந்தது. இந்த புயலின்போதும் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.2 புயல்கள் அடுத்தடுத்து வந்து அதிக மழை பெய்ததால் ஏராளமான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி கிடக்கின் றன. வாழை, தென்னை மரங்கள் சரிந்தன. பல கால்நடைகள் இறந்ததோடு, வீடுகளும் சேதம் அடைந்துள் ளன.

சென்னை வருகை...
புயல்-மழையால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கிட மத்திய அரசு , உள்துறை இணைச்செயலாளர் அசு தோஷ் அக்னி கோத்ரி தலைமையில் குழு ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.இந்த குழுவினர் சனிக்கிழமை(டிச.5) மதியம் சென்னை வந்தனர். ஐதராபாத் மத்திய வேளாண்துறையின் எண்ணை வித்துகள் வளர்ச்சி இயக்குனர் மனோகரன், மத்திய சாலை போக்குவரத்துறை மண்டல அதிகாரி ரணன் ஜெய்சிங், மத்திய நிதித்துறை இயக்குனர்களில் ஒருவரான பர்தெண்டு குமார்சிங், மத்திய மின்சார குழுமத்தின் துணை இயக்குனர் ஓ.பி.சுமன், ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் தர்மவீரர் ஜா, மீன்வள மேம்பாட்டு ஆணையர் பால் பாண்டியன், சென்னையில் உள்ள மத்திய நீர் ஆணைய கண்காணிப்பு இயக்குனர் ஜெ. ஹர்ஷா ஆகிய 7 பேர் இந்த குழுவில் உள்ளனர்.சென்னை வந்த மத்திய குழுவினர் பட்டினப்பாக்கம் லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் தங்கினர். மதியம் 4 மணிக்கு தலைமை செயலகத்தில் அதிகாரிகளை சந்தித்தனர். தலைமை செயலாளர் சண்முகம், பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் மத்திய குழுவினருக்கு வெள்ள சேதநிலவரங்களை விவரித்தனர்.

இரு குழுவாக...
புயல் பாதித்த மாவட்டங்களுக்கு 2 பிரிவாக சென்று பார்வையிட முடிவு செய்தனர். ஒரு குழுவினரை மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி அழைத்து செல்கிறார். இந்த குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (டிச.6) தென் சென்னை பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறார்கள். அதன் பிறகு செங்கல்பட்டு மாவட்டத் துக்கு சென்று பல சேதங்களை பார்வையிடுகிறார்கள்.மதியம் புதுச்சேரி சென்று அங்கு தங்குகிறார்கள். 7ஆம் தேதி காலையில் புதுச்சேரியில் புயலால் பாதிக்கப் 
பட்ட இடங்களை பார்வையிடுகிறார்கள். மதியம் 2 மணிக்கு பிறகு கடலூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டங்களுக்கு சென்று புயல் பாதித்த இடங்களை பார்வையிடுகிறார்கள். அதன் பிறகு அங்கிருந்து சென்னை திரும்புகிறார்கள்.இதே போல் மற்றொரு மத்திய குழுவினரை பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவாசன் புயல் பாதித்த மாவட்டங்களுக்கு அழைத்து செல்கிறார். இந்த குழுவினர் 6 ஆம் தேதி வடசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறார்கள்.நீரில் மூழ்கிய நெற்பயிர்களையும் பார்க்கிறார்கள். அதன் பிறகு காஞ்சிபுரம் சென்று அங்கிருந்து வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு சென்று புயல் சேதங்களை பார்வையிடுகிறார்கள். 6 ஆம் தேதி இரவு வேலூரில் தங்கும் மத்திய குழுவினர் 7 ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் புயல் சேதங்களை பார்வையிடுகிறார்கள். அதன் பிறகு, இரவு சென்னை வருகிறார்கள்.

முதலமைச்சருடன்...
2 மத்திய குழுவினரும் 8 ஆம் தேதி காலையில் சென்னையில் தலைமை செயலகம் சென்று தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்கள். அதன் பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கின்றனர். அப்போது தமிழகத்தின் சார்பில் புயல் பாதிப்பு சேத விவரங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரிவாக பட்டியலிட்டு மத்திய குழுவிடம் அளிக்க உள்ளார். அதன்பிறகு மத்திய குழுவினர் 8 ஆம் தேதி மாலை தில்லி செல்கிறார்கள்.தமிழக அரசு கொடுக்கும் அறிக்கை மற்றும் நேரில் பார்வையிட்ட சேத விவரங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மத்திய அரசுக்கு புயல் பாதிப்பு சேதங்களை மத்திய குழுவினர் சமர்ப்பிப்பார்கள். அதன் அடிப்படையில் மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான நிவாரண நிதியை வழங்கும்.

;