சென்னை:
பருவக் கால ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி திங்களன்று (டிச.28) சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 2012 ஆம் ஆண்டு முதல் பருவ கால ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா கால ஊரடங்கு காலத்திலும் ஊழியர்கள் தொய்வின்றி பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், பொது விநியோகத்தை பாதுகாத்து, பலப்படுத்த வேண்டும், பருவ கால ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கொரோனா தொற்று காலத்தில் பணி புரிந்த அங்காடி ஊழியர்களுக்கு அரசு அறிவித்த இடைநிகழ்வு செலவு தொகையை வழங்க வேண்டும்.துணை மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங் களை நிரப்ப வேண்டும், கிடங்குகளின் தேவைக்கு ஏற்றவாறு சுமைப்பணி தொழிலாளர்களை பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவர் வி.குமார் தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், பொது தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.புவனேஸ்வரன், பொருளாளர் எம்.ஏழுமலை, துணைப்பொதுச் செயலாளர்கள் ஆர்.மோகன், எஸ்.லூர்துசாமி, துணைத்தலைவர்கள் கே.சண் முகம், கே.சுப்புராஜ் உள்ளிட் டோர் பேசினர்.