tamilnadu

காவி நிற முண்டாசு: அட்டையை மாற்ற திருமா வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 5-காவி நிறத்தில் பாரதியார் தலைப்பாகை பாட புத்தக அட்டையை மாற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்த திருமாவளவன், “தமிழக முதல்வர் பிற மாநிலங்களில் தமிழை 3-வது மொழியாக பாடத் திட்டங்களில் அறிவிக்கவேண்டும் எனக் கூறியிருப்பதன் மூலம் தமிழகத்தில் இந்தியை3வது மொழியாக ஏற்றுக் கொள்ள உடன்படுகிறார் என்பதை மறைமுகமாக அறிவிக்கிறார். இது ஏற்புடையதல்ல. மிகக் கடுமையாக இந்தி திணிப்பை தமிழகம் எதிர்க்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.10 ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் அம்பேத்கர், பெரியார் வாழ்க்கை வரலாறு இடம் பெற்று இருந்தது. தற்போது அதனை தமிழக அரசு நீக்கியிருக்கிறது. அதே நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தமிழ் பாடப் புத்தகத்தின் அட்டைப் படத்தில் மகாகவி பாரதியார் படத்தை பொறித்துள்ளனர். ஆனாலும் அவரது தலைப் பாகைக்கு ‘காவி’ வண்ணத்தை பூசி இருக்கிறார்கள். இது திட்டமிட்ட உள் நோக்கத்துடன் திணிக்கப்பட்ட ஒன்று. பாரதியார் சாதி வேறுபாடு, தீண்டாமை, பெண் அடிமை போன்றவற்றை மூர்க்கமாக எதிர்த்த ஒரு கவிஞர். சொல்லப் போனால் அவர் ஒரு சனாதன எதிர்ப்பு போராளி. அவரை இழிவு படுத்தும் வகையில் தலைப் பாகைக்கு காவி பூசியது. வன்மையான கண்டத்துக்குரியது என்றும் வெள்ளை உடையில் தலைப்பாகை அமையும் வகையில் அட்டைப் படத்தை திருத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.அதிமுக அரசு எந்த அளவுக்கு பலகீனமாக இருக்கிறது என்றும் பாஜகவின் ஆதிக்கம் எந்த அளவுக்கு மேலோங்கியிருக்கிறது என்றும் இதில் இருந்து உணர முடிகிறது. தமிழக அரசு மோடி வழியில் செயல்படுகிறதா? ஜெயலலிதா வழியில் சுதந்திரமாக செயல்படுகிறதா? என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் இந்த போக்குகள் அமைந்துள்ளன. இதுவேதனைக்குறியதாகும் என்று திருமாவளவன் கூறினார்.