tamilnadu

img

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தம் சாலைப் பள்ளங்கள்

திருவண்ணாமலை – வேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கலசபாக்கத்தை அடுத்த விண்ணு வாம்பட்டு கால்நடை மருத்துவமனை அருகே சிறு பாலம் உள்ளது. செய்யாறி லிருந்து கிராம ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் தரைமட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மேற்பகுதியில் பள்ளம் ஏற்பட்டு சீரமைக்கப்படாமல் உள்ளது. பாலத்தின் நடுவே சில இடங்களில் பெரிய பள்ளம் உருவாகி, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், சிறிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டன. சிறிதாக இருந்த போதே சரி செய்யாமல் விட்டதால், இப்போது அவை, பெரிய குழிகளாக மாறியுள்ளன. பாலம் எந்த நேரத்தி லும் உடைந்து விழும் அபாயம் உள்ளது என்றனர். அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், தினசரி பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பயன் படுத்தும் சாலை யில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மின் விளக்கு வசதி இல்லாததால் இந்த பாலத்தை இரவு நேரங்களில் கடக்கும் போது வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர் என்றனர்.  சித்தூர் – கடலூர், தூத்துக்குடி – வேலூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் விதமாக இந்த சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலை யில் சுங்கம் வசூலிக்கும் தரத்தில் சாலை மேம்படவில்லை. இரு வழிச்சாலையும் முழுமையாக ஏற்படுத்தவில்லை. ஆனால் இனாம்காரியந்தல், சிஷ்யா பள்ளி அருகே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையில் சுங்கம் வசூலிப்பதற்கான நியாயமும் இல்லை. கலசபாக்கம் அருகே சிறு பாலத்தில் பள்ளம் ஏற்பட்டு 3 மாதங்கள் ஆகியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதுகுறித்து தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. வாகனங்களில் தினசரி செல்வோர் இந்த பள்ளத்தில் விழுந்து தடுமாறி செல்லும் நிலை உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு விண்ணுவாம்பட்டு பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமானுஜம் என்பவர் இந்த பாலத்தை கடக்கும் போது விபத்து ஏற்பட்டு, தற்போது திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே உயிர்சேதம் ஏற்படும் முன்பு இந்த பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்றும், மேலும் புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ள்ளனர்.

செந்தாமரைக்கண்ணன்