தமிழக மின்வாரியத்தை தனியார்மயப்படுத்தும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் ஆயிரக்கணக்கான மின் ஊழியர்கள் ஆவேச காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்வாரியத்தில் களப்பிரிவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களை கேங்மேன், ஐடிஐ ஒப்பந்த பணியாளர்களை கொண்டு நிரப் வேண்டும் என்பது மின்வாரிய தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் துணை மின் நிலையம் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்த்துள்ளது தமிழக அரசு மற்றும் மின்வாரியம். இந்த வாரிய உத்தரவு 82 ஐ திரும்பப்பெறும்வரை தமிழகம் முழுவதும் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு அறைகூவல் விடுத்தது.
இதனையேற்று கோவை டாடாபாத் மின்வாரிய மத்திய அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை திங்களன்று துவக்கினர். காலை 8 மணி முதலே தொழிலாளிகள் ஆவேசத்தோடு மின்வாரிய அலுவலகத்திற்குள் வந்தனர். துணை மின்நிலையங்கள், உற்பத்தி வட்டங்கள் உள்ளிட்ட பிரிவுகளை சார்ந்த ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து இப்போராட்டத்தில் பங்கேற்கனர். முன்னதாக போராட்டத்தில் பங்கேற்றவர்கள்
தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் வாரிய தலைவரின் சர்வாதிகார, மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், மின் மசோதா 2020 ஐ கொள்ளை புறவழியாக படிப்படியாக அமுல்படுத்தி வருவதை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். மின்ஊழியர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர்கள் கந்தவேல், மதுசூதனன், வீரசாமி, அப்துல் நாசர், சோமசுந்தரம், பொன்னுசாமி உள்ளிட்ட தலைவர்கள் போராட்டத்தை ஒருங்கிணைத்து வருகின்றனர். முன்னதாக தலைவர்கள் கூறுகையில், வாரிய உத்தரவு 82 ஐ திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும். இதில் பின்வாங்குவது என்கிற பேச்சுக்கே இடமில்லை. அது எத்தனை நாள் என்றாலும் தொழிலாளர்கள் உறுதியோடு இப்போராட்டத்தை நடத்த உள்ளோம் என தெரிவித்தனர்