tamilnadu

img

தூத்துக்குடி துப்பாக்க்கிச் சூடு குறித்து அறிக்கை தர உத்தரவு – சென்னை உயர் நீதிமன்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் அதிகாரிகள் மீது துறைரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை தரச் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது

கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர்உயிரிழந்தனர்

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கைத் தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரங்களைத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஹென்றி திபேன் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட துறைரீதியான நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தயாராகிவிட்டது. அடுத்த விசாரணையில் சமர்ப்பிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை மனுதாரருக்கு அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கை வரும் ஏப்ரல் 25 ஆம் தேதிக்குத் தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

;