சென்னை:
விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி விழுப்புரத்தில் நடந்த அரசு சட்டக்கல்லூரி மற்றும் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முதல்வர் பழனிசாமியிடம் மாவட்டத்தில் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.இதையடுத்து, “வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்” என முதல்வர் பழனிசாமி கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார்.இந்நிலையில் பல்கலைக்கழகம் அமைக்க தேவையான இடத்தை தேர்வு செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
இதுகுறித்து வருவாய்த்துறை வட்டாரங்கள் கூறியதாவது:-
பல்கலைக்கழகம் அமைய உள்ள இடம் விழுப்புரம் நகராட்சிக்குள் இருக்கும் வகையில் பல இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. அதில் திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஆவின் வளாகத்தில் தேவையான இடம் உள்ளது. அதில் காலியாக உள்ள பகுதியை பயன்படுத்தலாமா என பரிசீலிக்கப்பட்டு வருகிறது.இப்பகுதியில் உள்ள பால் பண்ணையில், பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதால் அதில் இருந்து வெளியாகும் வாசம் அதிக அளவில் உள்ளது. இதற்காக பால் பண்ணையையே வளவனூர் அருகே செங்காடு செல்லும் பகுதிக்கு மாற்றம் செய்யவும், அப்படி மாற்றம் செய்வதால் ஆவின் நிர்வாகத்திற்கு ஏற்படும் செலவுத் தொகை ரூ.4 கோடியை எப்படி திரட்டுவது என்றும் யோசிக்கப்பட்டு வருகிறது.சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன் நிச்சயம் பல்கலைக்கழக திறப்புவிழா நடைபெறும். அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தனர்.