tamilnadu

கர்ப்பிணிகளுக்கு சிகிச்சையளிக்க புதிய மருத்துவமனைகள்

சென்னை, மே 30- கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க 3 இடங்களில் சென்னை மாநகராட்சி சிறப்பு மருத்துவமனைகளை அமைத்துள்ளது. சென்னையில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனை, ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனை, கஸ்தூரி பாய் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகள் மகப்பேறு மருத்துவமனைகளாகவும் செயல்படுகின்றன. இது தவிர மண்டல அளவில் மகப்பேறு மருத்துவமனைகளும் உள்ளன. மேற்கண்ட 4 மருத்துவமனைகளில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 300 கர்ப்பிணி கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவர்களுக்கு சிகிச்சை அளிக்க மேற்  கண்ட மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. எனவே,  கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னை மாநகராட்சி புதிதாக 3 இடங்களில் 100 படுக்கை வசதி கொண்ட சிறப்பு  மருத்தவமனைகளை அமைத்துள்ளது. மண்டலம்-1ல் உள்ள  திருவொற்றியூர் மருத்துவமனையில் 50 படுக்கை, மண்டலம்-5ல் உள்ள பெருமாள்பேட்டை மருத்துவமனை, மண்டலம்-15 சோழிங்கநல்லூர் ஈஞ்சம்பாக்கம் மருத்துவமனை ஆகிய வற்றில் தலா 30 படுக்கைள் கொண்டதாக சிறப்பு மருத்துவ மனைகள் அமைக்கப்பட்டுள்ளன.