tamilnadu

img

நாகையின் ‘மலராத தாமரை’குளம்

நாகப்பட்டினம், ஏப்.4-நாகப்பட்டினம் நகரின் மையப் பகுதியில் அமைந்திருப்பது தாமரைக்குளம். வடக்குப் புறத்தில் நீதிமன்றங்கள், எதிர்ப் புறத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளன. இது நகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்டது. இதற்கு ஏன் இந்தப் பெயர் வந்ததென்று தெரியவில்லை. இந்தக் குளத்தில் தண்ணீர் இருந்ததும் இல்லை; தாமரைமலர்ந்ததும் கிடையாது. ஏறக்குறைய 2 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கும் இந்தக் குளம், மிகப்பெரிய பொதுக்கழிப்பிடமாகவும், இரவு நேரங்களில்,சமூக விரோதச் செயல்களுக்குரிய இடமாகவும் மாறிப்போய், சாலையில் செல்லும்போதே நாற்றமடிக்கும்,மூக்கை மூடிக் கொண்டுதான் அவ் வழியே போகமுடியும்.இந்நிலையில்தான், நாகை நகரப்பொதுமக்களும், வணிகப் பெருமக்களும் குளத்தைத் தூர்வாரிச் சுற்றிலும்கரைகள் கட்டி, கரைகளில் பூங்காஅமைத்து, நடைப்பயிற்சி பயிலவும், சிறுவர்கள் விளையாட விளையாட்டுக் கருவிகளும் அமைக்க வேண்டும்; குளத்தில் புதிய தண்ணீர்விட்டுப் புனரமைத்து, மக்கள் பயன் பாட்டிற்காக மாற்றிட வேண்டும் என நீண்டகாலமாகக் கோரி வந்தார்கள்.4 ஆண்டுகளுக்கு முன்பு, நாகப்பட்டினம் நகராட்சி நிர்வாகம் சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்பீட்டில் குளத்தைச் செப்பனிடும் பணியை ஒப்பந்தக்காரர் மூலமாகத் துவக்கியது. குளம், குளிக்கவும் நீச்சல் பயிலவும், கரைகள் அழகிய பூங்காவாகவும், பொழுதுபோக்கு இடமாகவும் மாறப் போகிறது எனக் கூறியே,பெரிய பெரிய வணிக நிறுவனங்களிடமும், ஓ.என்.ஜி.சி போன்ற நிறுவனத்திடமும் இன்னும் எப்படி எப்படியோ ஆயிரம் ஆயிரம், லட்சக் கணக்கில் வசூல் செய்து, சில கோடிகளைச் சுருட்டிக் கொண்டு, கொள்ளையும் கமிசனும் போக, மிக அற்பத்தொகையில் குளம் சீரமைக்கும் பணிகள் துவங்கின.குளம் தூர் வாரப்பட்டது, குளத்தைச் சுற்றிக் கரைகள் கட்டப்பட்டன. குளத்தின் மையத்தில் ஸ்தூபி போல் ஒன்று அமைக்கப்பட்டது. கரைகளில் பூஞ்செடிகள் நடப்பட்டன. சிறுவர்கள் விளையாட மலிவான விளையாட்டுக் கருவிகள் வைக்கப்பட்டன.குளக்கரையைச் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர்கள் கட்டப்பட்டன. பெரியஅலங்கார வாசல் கேட் அமைக்கப் பட்டது. எல்லாம் முடிந்து விட்டது. குளமும் பூங்காவும் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்படும் என்றார்கள். நாகை மக்கள் மகிழ்ந்து போனார்கள்.


ஒரு வாரம் சென்றது. ஒரு பெரியமழை பெய்தது. குளத்தின் வடக்குப்புறத்தில் கட்டப்பட்ட சிமெண்ட் கரைகள் இடிந்து குளத்திற்குள் விழுந்தன.போய்ப் பார்க்கும்போது, எல்லாம் மணலாக இருந்தது. இந்த அவலக் காட்சியை மக்கள் கண்டுவிடக் கூடாது என்று, நகராட்சி நிர்வாகம், குளத்தின் கிழக்குப் புறம் முழுவதும் தகரத்தாலும் பச்சைத் துணியாலும் மூடிவிட்டார்கள்.அதன்பிறகு, என்னேன்னவோ செய்தார்கள். மூடப்பட்ட குளம் திறக்கப் படவே இல்லை. திடீரெனஒரு நாள், ‘அம்மா’ காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்து விட்டார்கள் என்றார்கள். இதற்கிடையே, குளத்தின் தெற்குப் புறத்தில் கட்டப் பட்டிருந்த காம்பவுண்ட் சுவரைச் சிலர் இடித்து, நுழை வாயிலாக்கிச் சமூக விரோதச் செயல்களுக்கு வசதியாக்கிக் கொண்டார்கள். உலோகக் கேட்டுகள் பல திருடப்பட்டு, எஞ்சிய சில கீழே கிடக்கின்றன. இதுவரை அந்தக் குளம் மக்கள்பயன்பாட்டிற்குத் திறந்துவிடப் படவே இல்லை. மூடியே கிடக்கிறது.பழையபடி பொதுக்கழிப்பிடமாகவும் இரவு நேரங்களில் சமூக விரோதச்செயல்களுக்கு உரிய இடமாகவும் மாறிப் போய்விட்டது. குளத்தில் தண்ணீரும் இல்லை, தாமரையும் மலரவில்லை. குளத்தின் பெயரால்சில கோடிகள் கொள்ளை போனதுதான் மிச்சம். பழையபடி, மக்கள், அந்தப்பக்கம் போகும்போது, மூக்கை மூடிக் கொண்டுதான் போகிறார்கள்.

;