tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

ஏ.டி.எம். எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய கும்பல்
அம்பத்தூர், ஜூலை 17-  அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு காவலாளி இல்லை. செவ்வாயன்று (ஜூலை 17) இரவு 10 மணியளவில் கோபி என்பவர் இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பதற்காக தனது ‘டெபிட் கார்டை’ சொருகினார். அப்போது அதில் ஸ்கிம்மர் கருவி மற்றும் மைக்ரோ காமிரா பொருத்தப்பட்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி கோபி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் விரைந்து வந்த காவல்துறை யினர் அங்கு விசாரணை நடத்தினர். ஏ.டி.எம். எந்திரத்தில் பொருத்தப்பட்டு இருந்த மைக்ரோ காமிரா மற்றும் ஸ்கிம்மர் கருவியை பறிமுதல் செய்தனர். இதில் உள்ள ‘புளூடூத்’ வசதி மூலம் வாடிக்கையாளர் டெபிட் கார்டை பயன்படுத்தியதும் அதில் உள்ள அனைத்து பதிவுகள் மற்றும் பயன்படுத்தும் ரகசிய எண்ணை மர்ம கும்பல் கண்காணித்து வந்து உள்ளனர். இதன் மூலம் யாருடைய வங்கி கணக்கில் இருந்து பணம் சுருட்டப்பட்டு உள்ளதா? கருவிகளை பொருத்தியது யார் என்று விசாரித்து வருகிறார்கள்.

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி ஏமாற்றியவரை கடத்திய 2 பேர் கைது
அண்ணாநகர், ஜூலை 17-  மீஞ்சூரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் ஈக்காட்டுத் தாங்கலில் வேலை வாங்கி கொடுக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், தனக்கு தெரிந்த அதிகாரிகள் மூலம் அரசு வேலை வாங்கி கொடுக்க முடியும் என்று நண்பர்களி டம் தெரிவித்துள்ளார். இதை நம்பிய ராமநாதபுரத்தை சேர்ந்த கோபி ரூ.10 லட்சமும், கண்ணன் ரூ.35 லட்சமும் அரசு வேலைக்காக கார்த்திகேயனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் காத்திகேயன் கூறியபடி அரசு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. மேலும் பணத்தையும் திருப்பி கொடுக்க மறுத்து காலம் கடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 11-ஆம் தேதி அமைந்தகரைக்கு சென்ற கார்த்திகேயன் திடீரென மாயமானார். இது குறித்து அவரது அக்கா அமைந்தகரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் கார்த்திகேயனை, அவரிடம் பணம் கொடுத்து ஏமார்ந்த கோபியும், கண்ணனும் ராமநாதபுரத்துக்கு கடத்திச் சென்று இருப்பது தெரிந்தது. இதற்கிடையே வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக ஒப்புக் கொண்டதால், கார்த்திகேயனை விடுவிப்பதற்காக கோபியும், கண்ணனும் மீண்டும் காரில் அமைந்தகரைக்கு வந்தனர். இதனை அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று கோபி, கண்ணனை கைது செய்து கார்த்திகேயனை மீட்டனர்.கார்த்திகேயன் பலரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்து இருப்பது தெரிந்தது. இதுபற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

;