செவ்வாய், ஜனவரி 19, 2021

tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

விஷவாயு தாக்கி 2 பேர் பலி: இருவர் கைது
அம்பத்தூர், ஜன.21- அம்பத்தூர்மண்டலம் ஜஸ்வந்த் நகர் ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள பணிமனை 91 கழிவுநீர் அகற்றும் நிலையத்தில், ஒப்பந்த அடிப்படையில் கழிவு நீர் தொட்டிக்கு இரும்பாலான மூடி தயாரிக்கும் பணி நடைபெற்றது. அப்போது பாடி என்.எஸ்.கே.நகரைச் சேர்ந்த கண்ணன், கொளத்தூர் ரெட்டேரி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் ஆகிய இருவரும் வெல்டிங் வேலை செய்தனர். அப்போது, 6 அடி ஆழமுள்ள கழிவு நீர் தொட்டியில் கண்ணன் தவறி விழுந்தார். இவரை காப்பாற்ற கழிவுநீர் தொட்டியில் பிரகாஷ் இறங்கினார். இதில் இருவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இருவர் உடலையும் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, காண்ட்ராக்டர் சுரேஷ், சூப்பர்வைசர் கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கார் விற்பனை அலுவலகத்தில் ரூ.3 லட்சம் கொள்ளை
கொளத்தூர், ஜன.21- சென்னை கொளத்தூர் 200 அடி சாலையில் பழைய கார்களை வாங்கி விற்கும் நிறுவனம் நடத்தி வருபவர் முருகன் (49). இவர் திங்களன்று இரவு வழக்கம்போல் அலுவலகத்தை பூட்டிச் சென்றுள்ளார். பின்னர், செவ்வாயன்று (ஜன.21) காலை அலுவலகம் வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த காரையும் காணவில்லை. பின்னர், அலுவலகத்திற்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.3 லட்சம் மற்றும் 64 கார்களின் சாவிகளும் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சி.சி. டி.வி. கேமரா மற்றும் டி.வி. களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து முருகன் ராஜமங்கலம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவன் கடத்தல் 
வில்லிவாக்கம், ஜன.21- வில்லிவாக்கம் ராஜாஜி நகர் பாரதி தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார் (45). ரயில்வே ஊழியர். இவரது மூத்த மகன் சஞ்சய் (14). சூரப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். திங்களன்று மாலை 6 மணிக்கு டியூசனுக்கு சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவன் கிடைக்கவில்லை. பின்னர் பெற்றோர் ராஜமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் செவ்வாயன்று காலை அம்பத்தூர் சூரப்பட்டு அருகே சஞ்சய் தனியாக நின்று கொண்டு, அந்த வழியாகச் சென்ற சிலரிடம் உதவி கேட்டுள்ளார். பின்னர் பொதுமக்கள் மாணவனை ராஜமங்கலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் காவல்துறையினர் சஞ்சயிடம் விசாரணை நடத்திய போது, டியூசன் முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தபோது, 2 பேர் கடத்தி இரு சக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றதாகவும், அப்போது மயக்க மருந்து கொடுத்ததில் தான் மயங்கி விட்டதாகவும் கூறினார். ஒரு வீட்டில் தன்னை அடைத்து வைத்திருந்தபோது அங்கிருந்து தப்பித்து வந்து விட்டதாகவும் சஞ்சய் கூறினான். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி, மாணவனை கடத்திய 2 பேரை தேடி வருகிறார்கள்.

;