tamilnadu

img

பொன்னுலகம் படைப்போம்! போராட வா தோழனே...!

சென்னை:

மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு வாய்ப்பில்லாத, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் ஓர் இனிய உலகத்தைப் படைப்பதற்கான போரில் சளைக்காது ஈடுபட இந்த மே நன்னாளில் உறுதியேற்போம் என தமிழக தொழிலாளர் வர்க்கத்திற்கு சிஐடியு - ஏஐடியுசி கூட்டாக அறைகூவல் விடுத்துள்ளன.

மே தினத்தையொட்டி சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள மே தின சூளுரை வருமாறு:


17வது இந்திய நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல்கள் 7 கட்டமாக நடந்து கொண்டிருக்கும் போது, இந்தாண்டு மே தினம் வந்துள்ளது. உழைக்கும் வர்க்கத்தின் உரிமைத் திருநாளான மே நன்னாளில் ஏஐடியுசி, சிஐடியு சார்பில் அனைவருக்கும் புரட்சிகரமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கொடியை இறக்கு, கொடிக் கம்பத்தை அகற்று, கொடி பீடத்தை இடித்திடு என்று தேர்தல் ஆணையத்தின் பெயரால் குட்டி தேவதைகள் ஆடாத ஆட்டம் ஆடினார்கள். தமிழகத்தில் ஏப்ரல் 18ல் வாக்கெடுப்பு முடிந்துவிட்டதால் தேர்தல் ஆணையத்தின் பெயரால் நடத்தப்படும் குறுக்கீடுகள் குறைவாக இருக்கும். இந்த மே தினத்துக்கு புதிய கம்பங்கள் நட்டுப் புதுக்கொடி ஏற்ற வேண்டியிருக்கும்.


மனிதகுலத்தின் எதிரி முதலாளித்துவம்

சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளின் ஆட்சி வீழ்ந்த போது, முதலாளித்துவமே தீர்வு எனத் தொண்டை கிழிய கத்தித் தீர்த்தார்கள். ஆனால் முதலாளித்துவம் தான் மனிதகுலத்தின் எதிரி என்பதைக் காலம் நிரூபித்து விட்டது. கடந்த 25 ஆண்டுகளாக உலகம் பொருளாதார நெருக்கடிக்குள் மூழ்கிக் கொண்டே இருக்கிறது.


சிறு, குறு, நடுத்தர தொழிலகங்களை மட்டுமல்ல; பெரிய நிறுவனங்களையும் கூட விழுங்கி உலக அளவிலான பிரம்மாண்ட பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் எழுந்து விட்டன. சர்வதேச நிதி மூலதனம் தொழில்களை மட்டுமின்றி, தேச அரசுகளையும் ஆட்டி வைக்கிறது. அதன் விருப்பத்துக்கு விரோதமாக நடந்தால் நாடு தொலைந்தே போகும் என எச்சரிக்கிறது. அந்தந்த நாடுகளின் சட்டங்கள் குப்பையில் வீசப்படுகின்றன.


தொழிலாளர்களின் வேலைக்கும், சம்பளத்துக்குமான உத்தரவாதம் அகற்றப்படுகிறது. தொழிலாளர் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. வேலை நேரமும் வேலைச்சுமையும் ஏற்றப்படுகிறது. இதனால் வேலையின்மை அதிகரிக்கிறது. குறைவான பணக்காரர்கள் கையில் ஏராளமாய்ச் செல்வம் குவியவும், மிகப் பெரும்பாலானவர்கள் அடிப்படைத் தேவைகளையே நிறைவு செய்ய முடியாமல் அலைவதுமான பெருமளவிலான சமமின்மை உருவாக்கப்பட்டுவிட்டது. தேசங்களின் இயற்கை வளங்கள், கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன.


மக்களின் பாதிப்புகளைத் தேச அரசுகளால் களைய முடியவில்லை. தமது துயரங்களுக்கான காரணத்தை அறிந்து எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக, மத, இன, அடையாளங்களை முன்னிறுத்தி பேரினவாத மேலாதிக்கம், சக மனிதர்கள் மீது வெறுப்பு, படுகொலைகள் என வலதுசாரி திருப்பம் உலக அரசியலில் உருவாகியுள்ளது. இது நீட்சி பெற்று பாசிசத் தன்மையும் பெறுகிறது.


பாசிச சக்தி

இதன் பிரதிபலிப்பை இந்தியாவிலும் காண முடியும். உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறிய போது, அதன் பாதிப்பு இந்தியாவைத் தொடாமல் காப்பாற்றியது இந்திய பொதுத்துறை வங்கிகளும், பொதுத்துறை உற்பத்தி, சேவை நிறுவனங்களும் ஆகும். இதன் மீது பன்னாட்டு நிதி மூலதனத்தின் கண் விழுந்தது. ஒரு கையில் மதவெறியும், மறுகையில் கார்ப்பரேட்டுகளுக்கு அடிபணியும் கொள்கைகளுமாக மோடி வாய்த்தார். இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்லத் தகுதி வாய்ந்த ஒரே நபர் என்று அவரை பிரதமர் நாற்காலியில் இந்தச் சக்திகள் தூக்கி உட்கார வைத்தன.

கடந்த ஐந்து ஆண்டுகளும் இந்தியத் தொழிலாளர்கள், விவசாயிகள், உள்நாட்டுத் தொழில்களுக்கு முழுதான எதிரியாய் ஒரு ஆட்சி நடந்து முடிந்திருக்கிறது. அம்பானி, அதானி உள்ளிட்ட பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் நலனுக்காக மொத்த இந்தியாவும், இந்திய மக்களும் பலி கொடுக்கப்பட்டனர்.


6 லட்சம் தொழிற்சாலைகள் மூடல்

தமது கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கிக் கொள்வதற்காக 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்களைச் செல்லாமல் ஆக்கியதும், நெறியற்ற வகையில் போடப்பட்ட ஜிஎஸ்டி வரியும் சேர்ந்து 6 லட்சம் தொழிற்சாலைகளை மூட வைத்தது, 6 கோடித் தொழிலாளர்களின் வேலையைப் பறித்தது. 

நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கை பெரிதும் குறைக்கப்பட்டு விட்டது. ஒப்பந்தத் தொழிலாளர் முறையில்கூட ஒரு சில உரிமைகள் தொழிலாளர்களுக்கு விட்டு வைக்கப்படுகிறது என்பதால், ‘பிக்ஸட் டெர்ம்’ எனப்படும் குறித்த காலப் பணி நியமன முறை கொண்டு வரப்பட்டது. அதில் கூட எம்ப்ளாய்மெண்ட் எனும் வார்த்தை உள்ளதால் ‘நீம்’ என்ற பயிற்சியாளர் முறை கொண்டு வரப்பட்டு விட்டது. ஒரு போதும் தொழிலாளி என்ற தகுதியே கிடைக்காது என்றானால், நிரந்தரம் கோருவது எப்படி?


பிளவுபடுத்தும் தந்திரங்களை எச்சரிக்கையோடு புறந்தள்ளுவோம்!

ஏதோ ஒரு வேலை கிடைத்து, அதில் வாழ்க்கை நடத்துவதற்குப் போதிய சம்பளம் ஈடுகட்ட முடியாமலும், எப்போது வேலை போகும் என்ற அச்சத்துடனும் வாழ்வோர் ஒரு புறம். எந்த வேலையும் கிடைக்காமல் விரக்தியடைந்த இளைஞர்கள் இன்னொருபுறம், இந்த வெறுமை நிலையைப் பயன்படுத்தி, அவர்களுக்கு மதம், சாதி, வட்டாரம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வெறியூட்டி, தன்னைப் போன்றே அவதியுறும் மாற்று மத, சாதி, வட்டார மொழியினரை எதிர்த்து கலகம் செய்யத் தூண்டுகின்றனர். இதனால் தொழிலாளர் ஒற்றுமைக்கு தீவிரமான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பிளவுபடுத்தும் தந்திரங்களை எச்சரிக்கையோடு அணுகி தொழிலாளர் ஒற்றுமை கட்டப்பட வேண்டும்.

கடந்த நாற்பது ஆண்டுகளாக, பெருமளவில் தொழிற்சங்கங்களை ஒன்று சேர்த்து, ஒற்றுமைப்படுத்தி தாராளமயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி வருகிறோம். இந்த ஆண்டு ஜனவரி 8, 9 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் 20 கோடித் தொழிலாளர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். பொது வேலை நிறுத்தம் மட்டுமின்றி, துறைவாரியான வேலை நிறுத்தங்களில் தொழிலாளர்கள் ஒற்றுமையாக ஈடுபட்டிருக்கின்றனர்.


தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட குரலுக்கு பாஜக அரசு செவி சாய்க்கவில்லை. நிர்வாகம் மற்றம் ஜனநாயகத்தின் தூண்களான நீதிமன்றம், நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வுத் துறை உள்ளிட்ட அனைத்தையும் அடித்து நொறுக்கி, ஊடகங்களை அச்சுறுத்தி அல்லது விலைக்கு வாங்கி எல்லாமே மோடி என்ற சர்வாதிகாரத்தை நிலை நாட்ட முயற்சிக்கிறார்கள். இந்தியாவின் அரசியல் சட்டத்தையே மாற்ற வேண்டும் என்றும் பகிரங்கமாகக் கூறுகிறார்கள்.


‘தொழிலாளி’யே இல்லை

பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் 15 பெருந் தலைப்புகளும் 115 குறுந் தலைப்புகளும் உள்ளன. அவற்றில் ‘தொழிலாளி’ என்ற சொல் இல்லவே இல்லை.

தேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ள, மே 23 வரை தேசம் காத்திருந்தாக வேண்டும். பாசிசத் தன்மையும், கார்ப்பரேட்டுக்கு மண்டியிட்ட பொருளாதாரக் கொள்கையும் கொண்ட சர்வாதிகாரத்தின் கைகளில் சிக்காமல் நாட்டைப் பாதுகாப்பது உழைக்கும் வர்க்கத்தின் முதல் கடமையாகும். அதன் பின்னர் அமையும் அரசாங்கமும் தொழிலாளர்களுக்குச் சாதகமாக இருக்கும் என்றோ, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளைக் கைவிட்டு விடும் என்றோ நாம் எண்ணவில்லை. எனவே நமது போராட்டங்கள் தொடர்ந்தாக வேண்டும்.


தமிழகத்தில் நடக்கும் ஆட்சி, பாஜகவின் உள்ளங்கைக்குள் உள்ளது. தொழிலாளர் கோரிக்கைகள், போராட்டங்கள், உரிமைகளை மெதுவாக மாநில அரசு அலட்சியப்படுத்துகிறது. அண்மைக்காலத்தில் ராயல் என்ஃபீல்டு, கெம்ப்ளாஸ்ட், ஆனந்தவிகடன், பிரிகால் உள்ளிட்ட தொழிலாளர்களின் நியாயமான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. தொழிலாளர் துறை முதலாளிகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டது. மருத்துவமனை, உள்ளாட்சித் தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்ட பின்பு, அதை மேலும் குறைக்க மறுபரிசீலனை குழு அமைக்கும் கொடுமை நடைபெறுகிறது. சென்னையைச் சுற்றி வந்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியத் தொழிலாளர் சட்டங்களை தூர எறிந்துவிட்டு, தமது கம்பெனியின் கொள்கைப்படிதான் தொழிலுறவு என்று சொல்வதை வெட்கமில்லாமல் ஆமோதிக்கிறது மாநில அரசு. மாநில பொதுத்துறை, கூட்டுறவு, உள்ளாட்சி அமைப்புகளிலும் கூட தொழிலாளர் சட்டங்களை அரசாங்கமே மீறுகிறது.


* மாதம் ஒன்றுக்கு ரூ.18,000க்குக் குறையாத ஊதியம்


* 58 வயதைக் கடந்த அனைத்துத் தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.6,000க்குக் குறையாத ஓய்வூதியம்


* காண்ட்ராக்ட், அவுட்சோர்சிங், பிக்ஸட் டெர்ம் எம்ப்ளாய்மெண்ட், நீம் பயிற்று முறை சுமங்கலித் திட்டம் உள்ளிட்ட கொத்தடிமை முறைகளுக்கு முற்றுப்புள்ளி.


* தொடர்ச்சியும் நிரந்தரத் தன்மையும் கொண்ட வேலைகளில் 480 நாள் பணிபுரிந்து விட்டால் நிரந்தரப்படுத்துதல்


* தொகுப்பூதியம், மதிப்பூதியம், ஊக்கத்தொகை போன்ற அற்பக் கூலி முறையை ஒழித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி சம வேலைக்கு சம ஊதியம் வழங்குதல்


* தொழிலாளர் சட்டங்கள் முதலாளிகளுக்குச் சாதகமாகத் திருத்தப்படுவதை நிறுத்துதல்


* கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலவாரியங்களைப் பாதுகாப்பது; நிதிப் பலன்களை உயர்த்தச் செய்து, செயல்பட வைத்தல்


* சங்கம் சேரும் உரிமை, கூட்டு பேர உரிமைகளை சட்டப்படி அரசை ஏற்க வைத்தல்


* பெண் தொழிலாளர்களின் கண்ணியம் காத்தல்; பணியிட வன்முறைகளைத் தடுத்து நிறுத்துதல்


* ரயில்வே, ராணுவத் தொழிற்சாலைகள், வங்கி, காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாத்தல்


* விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட சகல பகுதி மக்கள் திரளின் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு நிலையை உயர்த்துதல்; பேச்சுரிமை, எழுத்துரிமை பாதுகாத்தல்


- என உழைப்பை மட்டுமே நம்பி வாழ்கிற கோடானுகோடி சாமானிய மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் எழுச்சி மிக்க போராட்டங்களை தொடர்ச்சியாக, வீறு கொண்டு முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமை தொழிலாளி வர்க்கத்தின் தோள்களில் இருக்கிறது.

மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு வாய்ப்பில்லாத எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் ஓர் இனிய உலகத்தைப் படைப்பதற்கான போரில் சளைக்காது ஈடுபட இந்த மே நாளில் உறுதியேற்போம்.


தொழிலாளர் ஒற்றுமை வாழ்க! தொழிற்சங்க ஒற்றுமை ஓங்குக! மேதினம் நீழி வாழ்க!


;