தஞ்சாவூர் ஏப்.26-உழைக்கும் தொழிலாளர்களின் ஒப்பற்ற உலகத் திருவிழாவான மே தின நிகழ்ச்சிகளை ஏஐடியுசி- சிஐடியு தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் நடத்துவது என தீர்மானித்துள்ளன. ஏஐடியுசி மற்றும் சிஐடியு நிர்வாகிகள் கூட்டம், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமையில் நடைபெற்றது. ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார், மாவட்டச் செயலாளர் ஆர்.தில்லைவனம், மாவட்டத் தலைவர் வெ.சேவையா, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத் தலைவர் துரை.மதிவாணன், வங்கி ஊழியர் சங்கத் தலைவர் கே.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் மே தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் மே-1 தேதி காலை அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பணியாற்றும் பகுதிகளில் கொடியேற்றி உறுதிமொழியேற்று சிறப்பாக கொண்டாடுவது, மாலை 5 மணிக்கு தஞ்சையில் மே தின பேரணியும், அதனை தொடர்ந்து பனகல் கட்டிடம் முன்பு பொதுக்கூட்டமும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதில் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர். இக்கூட்டத்திற்கு, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை ஏற்கவுள்ளனர். வங்கி ஊழியர் சங்க செயலாளர் கே.அன்பழகன், ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்க தலைவர் என்.புண்ணியமூர்த்தி முன்னிலை வகிக்கின்றனர். ஏஐடியுசி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.பழனிசாமி, சிஐடியு சார்பில் மாலதி சிட்டிபாபு சிறப்புரையாற்றுகின்றனர்.