tamilnadu

img

சங்கம் அமைக்கும் உரிமைக்கு எதிராகவே நீதிபதிகள் கருத்து தெரிவிப்பது ஏற்கத்தக்கதல்ல, வருந்தத்தக்கது - அ.சவுந்தரராசன், சிஐடியு

மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள், காவல் துறையினர், தீயணைப்புத்துறையினர் போன்றோருக்கு சங்கம் தேவையில்லை என்று கூறியுள்ள நீதிபதிகளின் இந்த கருத்து வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது என்று இந்திய தொழிற் சங்க மையத்தின் மாநில தலைவர் அ.சவுந்தரராசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தை தடைசெய்யுமாறு யூனுஸ்ராஜா என்பவர் வழக்குதொடுத்தார். இந்த வழக்கின் போக்கில் நீதிபதிகள் என்.கிருப்பாகரன் மற்றும் பி.புகழேந்தி ஆகியோர் மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள், காவல் துறையினர், தீயணைப்புத்துறையினர் போன்றோருக்கு சங்கம் தேவையில்லை என்று கருத்து கூறியுள்ளனர்.

நீதிபதிகளின் இந்த கருத்து வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது

சங்கம் இருந்தாலே வேலை நிறுத்தம் நடக்கும் என்ற அனுமானத்தில் இருந்து சிலப்பிரிவினருக்கு சங்கமே தேவையில்லை என்ற முடிவு எட்டப்படுகிறது

சங்கம் இருக்கிற துறைகளில் அல்லது ஆலைகளில் நினைத்த போதெல்லாம் பொழுதுபோக்காக யாரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கவில்லை. மெய் வருத்தியும், மூளையை கசக்கியும் வேலை செய்வோருக்கு அந்த வேலையின் பலனை அனுபவிக்கும் முதலாளிகள் அல்லது நிர்வாகத்தினர் குறைந்தபட்ச நியாயத்தை செய்ய மறுக்கும்போது, சட்டப்படியாக கூட நடக்காதபோது, இழிவாகவும், மனிதத்தன்மையற்றும் நடத்தும்போது, அற்ப காரணத்திற்கெல்லாம் ஆணவத்தோடு தண்டிக்கும்போதும் வேலை செய்வோருக்கு போராட்டந்தானே ஒரேவழி? வேலையின் பலனை சுரண்டிக் குவித்து ஆனந்தம் கொள்வோருக்கு அந்தப் பலன் நிற்கும்போது மட்டும்தான் வலிக்கிறது

நவீன தொழில்நிறுவனங்கள் தோன்றிய கடந்த 300 ஆண்டுகளாக நடந்த எண்ணற்ற போராட்டங்களால் பிறந்த உரிமைதான் தொழிற்சங்க உரிமை. தொழிற்சங்க உரிமை யாரும் போட்ட பிச்சையல்ல உற்பத்தி சுமுகமாக நடக்கவே தொழிலாளர்கள் கூட்டாகவும், அமைப்பாகவும், இயங்க அனுமதிக்க வேண்டும் என்று முதலாளிகளும் அரசும் உணர்ந்து ஏற்றுக்கொண்டதன் விளைவுதான் தொழிற்சங்க சட்டமாகும். பழிவாங்கலுக்கு அஞ்சி யாரும் எடுத்த எடுப்பில் சங்கம் அமைப்பதில்லை. இப்போதும் எண்ணற்ற தொழிற்சாலைகளில், நிறுவனங்களில் சங்கம் இல்லை நமது சுதந்திரத்தின் லட்சணம் அப்படி. ஒரு இடத்தில் சங்கம் வருகிறது என்றால் அங்குள்ள சூழ்நிலைக் கொடுமையின் கட்டாயம் அது என்பதை உணரவேண்டும். தொழிலாளர்களோ, மருத்துவர்களோ, காவல்துறையோ யாரானாலும் மனிதனாக மதிக்கப்பட்டால், மனிதத்தன்மையோடு நடத்தப்பட்டால், அவர்கள் தரப்பு நியாயம் ஏற்கப்பட்டால் போராட்டங்கள் வராது. போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும் நடக்கிறது என்றால் அதனை நடத்துபவர்களை மட்டும் குற்றக் கண்கொண்டு பார்க்காமல் அதன் மறுபக்கத்தையும் அக்கறையோடு கவனிக்கவேண்டும்.

மக்களின் திடீர் போராட்டங்கள் அன்றாடம் வெடிக்கின்றன அங்கெல்லாம் சங்கமே இல்லை எனினும் ஏன் போராட்டங்கள் வெடிக்கின்றன என்று மனம்கொண்டு யோசிக்கவேண்டும்.

ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளே தலைமை நீதிபதியின் செயல்பாடுகள் தவறு என்று கூட்டாக தெருவிற்கு வந்து மக்களுக்கு அறைகூவல் விடுத்ததின் பொருள் என்ன? அந்த போராட்டத்திற்கு அவர்களுக்கு என்ன சங்கமா இருந்தது? ஆனாலும் அவர்கள் அநீதியை எதிர்த்து போராட்டத்தை முன்னெடுத்தார்கள். கோவில் அர்ச்சகர்கள் கூட சங்கம் அமைத்து போராடும் நிலைக்கே தள்ளப்படுகிறார்கள்

வேலை நிறுத்தங்களுக்கு இப்போதும் சட்டத்தில் வரையறைகள், கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் இருக்கின்றன. வேலை நிறுத்தங்கள் விளையாட்டுமல்ல சட்டப்படி கேள்வி வரைமுறைக்கு அப்பாற்பட்டதுமல்ல. வேலை நிறுத்தம் சட்டப்படி சரியா தவறா என்பதை அரசு தீர்மானிக்கவேண்டும். அரசு அப்படி எடுக்கும் முடிவு குறித்து சட்டப்படி நீதிமன்றம் பரிசீலிக்கலாம் அரசின் வேலையை, தொழிலாளர் துறையின் வேலையை நீதிமன்றம் எடுத்துக்கொள்ளக்கூடாது.

பல வேலை நிறுத்தங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவது பிரச்சனையை தீவிரப்படுத்தவே செய்கிறது. அரச கட்டளை என்பதைப் போல நீதிமன்ற கட்டளை என்று வேலை நிறுத்தத்தை முடக்குவதால் சரியான நீடித்த தீர்வு கிடைக்காது இதில் சமூக பொறுப்போடும் கரிசனத்தோடும் அரசும் நிறுவனத்தாரும் நடந்தால்தான் இருதரப்பிலும் புரிந்துணர்வும், அமைதியும் ஏற்படும்

எனவே, சங்கம் அமைக்கும் உரிமை எல்லோருக்கும் வேண்டும் அந்தந்த துறையினர் தத்தம் குறைகளை கூட்டாக முறையீடு செய்து தீர்வினை எட்டும் உரிமை உறுதிப்படவேண்டும். நீதிபதிகள் சங்கம் அமைக்கும் உரிமைக்கு எதிராகவே கருத்து தெரிவிப்பது ஏற்கத்தக்கதல்ல, வருந்தத்தக்கது. என அ.சவுந்தரராசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;