tamilnadu

img

அதிகரிக்கும் வைரஸ் பரவல்: சுகாதாரத்துறை எச்சரிக்கை....

சென்னை:
பண்டிகைக் காலத்துக்கு முன்னர் இருந்ததுபோல் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக சராசரியாக பாதித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு குறைவாகவே இருந்து வருகிறது.இந்த நிலையில், தீபாவளி பண்டிகை விடுமுறை நிறைவடைந்துள்ளது. பிற மாவட்டங்களில் பண்டிகை காலத்துக்கு பின்னர் தொற்று அதிகரித்துள்ளது. இதனால் தற்போது தமிழகத்தில் மேலும் தொற்று அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந் நிலையில் வரும் 14 முதல் 28 நாட்கள் மிகவும் முக்கியமானது என்றும், இந்த காலங்களில் கொரோனா பரிசோதனையை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கும் சுகாதாரத்துறை செயலாளர்  ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் அனுப்பி உள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:நாளுக்கு நாள் காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே இருக்கிறது. வரும் நாட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிதல், நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றுதல் ஆகியவற்றை முழுமையாக கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கட்டுமான பகுதிகள், நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், பணிபுரியும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.கடந்த இரு நாட்களாக தஞ்சாவூரில் ஒரு கட்டுமான பகுதியிலும், சென்னை தண்டையார்பேட்டையில் பீகாரில் இருந்து வந்தவர்களிடம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கொரோனா பரிசோதனை மற்றும் காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையை எந்த சூழ்நிலையிலும் குறைக்கக் கூடாது. படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பல மாநிலங்கள் ‘ஆன்டிஜென்’ பரிசோதனை மட்டும் செய்வதால், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.பண்டிகைக் காலங்களுக்கு முன்னர் இருந்த அளவுக்கு பரிசோதனை மேற்கொள்ளாவிடில், பல கொரோனா பாதிப்பை கண்டறியாமல் போய்விடும். எனவே இனிவரும் 14 முதல் 28 நாட்களும் மிகவும் முக்கியமானது. பண்டிகைக் காலங்களுக்கு முன்னர் இருந்ததுபோன்று தற்போது கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.