சென்னை, ஜன. 23 - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
சாதி-மத பழமைவாத மூடப்பழக்கவழக்கங்களை எதிர்த்த வள்ளலாரை ‘சனாதனி’ என்றும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரை பாரதிய சனாதன இந்து மதத்தின் துறவி என்றும் கூறி, தமிழ்நாட்டு மக்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
தற்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் புகழ்பாடு கிறேன் என்ற பெயரில் தேசத்தந்தை மகாத்மா காந்தியை விமர்சித்துள்ளார். “ 1947ல் நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியே முக்கிய காரணம். காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை” என்று வன்மத்தைக் கக்கியுள்ளார். இந்திய தேசிய காங்கிரஸின் போராட்டத்தால் நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேறவில்லை என அப்போதைய பிரிட்டன் பிரதமர் அட்லி கூறியதாகவும் ஆளுநர் ரவி பேசியுள்ளார்.