சென்னை:
திண்டுக்கல் மாவட்டத்தில் 12 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், அரசு மேல்முறையீடு செய்து குற்றவாளிக்குத் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக, கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“திண்டுக்கல் மாவட்டத்தில் 12 வயதுச் சிறுமியை கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கிருபானந்தனை போதிய ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.35 சாட்சிகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர். ஒருவர், சம்பந்தப் பட்டவர், அந்தச் சிறுமியின் வீட்டிலிருந்து வெளியே வந்ததைப் பார்த்ததாகவும் சாட்சியாகச் சொல்லியுள்ளார். சம்பந்தப்பட்டவரைக் கைது செய்ய, மக்கள் போராட்டம் நடத்திய பிறகே அவரைக் காவல்துறை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளது.குற்றவாளி, தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதன் பிறகும் நீதிமன்றம் அவரை நிரபராதி என்று விடுதலை செய்திருப் பது எவ்வளவு பெரிய அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரிய ஒன்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த அந்தச் சிறுமி, முடிதிருத்தும் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அரசுத் தரப்பில் வழக்கு சரியாக நடத்தப்படவில்லையா?
இந்த வழக்கில் மேல்முறையீடு செய்து தவறான நீதிப் போக்கைத் தடுத்து நிறுத்தி, குற்றம் இழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்தி, சரியான முறையில் தண்டனை வழங்கிட தமிழ்நாடு அரசு உடனடியாக ஆவன செய்ய வேண்டும்.இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.