tamilnadu

img

கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி.ரா.,.... தமுஎகச புகழஞ்சலி....

புதுச்சேரி/சென்னை:
கரிசல் இலக்கியத்தின் முன்னோடியான எழுத்தாளர்  கி.ரா என்ற  கி.ராஜநாராயணன் ( வயது 99) மே 17 அன்று புதுச்சேரியில் காலமானார். அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்ச்சி நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்த  கி. ராஜநாராயணன்,  1923 ஆம் செப்டம்பர் 16 ஆம் தேதி பிறந்தார். விவசாயியான மறைந்த எழுத்தாளர் கி.ரா. அவர்கள்  கரிசல் வட்டாரத்து மக்களின் வாழ்க்கையை, மக்களின் பேச்சுமொழியில் எழுத்துகளாக வடித்து கொண்டுவந்தவர். சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகளை இவர் பெற்றுள்ளார்.தனது கடைசிக்காலம் வரை எழுதிக்கொண்டே இருந்தவர். கரிசல் வட்டார சொல்லகராதியை உருவாக்கியவர். பல்வேறு சிறுகதைகள், நாவல்கள்,கட்டுரைகளை எழுதியவர். கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலுக்காக இவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இவர் எழுதிய ‘கிடை’ என்ற கதையை மையமாக வைத்து ‘ஒருத்தி’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது.

இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.  7ஆம் வகுப்பே படித்துள்ள கி.ராஜநாராயணன்  புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றினார். இவரது இலக்கிய பணிக்கு மரியாதை செலுத்தும் வகையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் அவருக்கு அரசு சார்பில் வீடு வழங்கப்பட்டது. இவருக்கு திவாகரன், பிரபி என்கிற பிரபாகரன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.கி.ரா.வின் மனைவி குணவதி அம்மாள் 2019 இல் காலமானார்.

புதுச்சேரி ஆளுநர் அஞ்சலி
புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராசன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார்  எம்.பி., திமுக தெற்கு மாநில அமைப்பாளர் ஆர்.சிவா எம்.எல்.ஏ.,முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் பிரதேச தலைவர் வீர.அரிகிருஷ்ணன், செயலாளர் உமாஅமர்நாத்உள்ளிட்ட எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த முதலமைச்சர் என்.ஆர்.ரங்கசாமி, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசு மரியாதை
லாஸ்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த எழுத்தாளர் கி.ரா.வின் உடல் செவ்வாய்க்கிழமையன்று பிற்பகல் அவரது சொந்த ஊரான கோவில்பட்டிக்கு எடுத்துச் செல்வதற்கு முன்பு மதியம் 1 மணிக்கு புதுச்சேரி அரசு தரப்பில் காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது. அரசு தரப்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் புதுச்சேரியிலிருந்து கோவில்பட்டி இடைச்செவல் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆம்புலன்ஸ் தமிழக காவல்துறை வாகன பாதுகாப்புடன் புறப்பட்டது.அவரது சொந்த ஊரில் புதன்கிழமை யன்று பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்துகிறார்கள். அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் முழு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. 

கி.ரா.வுக்கு சிலை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (கி.ரா.) அவர்கள் ஏட்டறிவைக் காட்டிலும் பட்டறிவால் பல இலக்கியப் படைப்புகளைத் தந்தவர்; வட்டார வழக்கு சார்ந்த இலக்கியப் படைப்புகளுக்கு முன்னோடி யாகத் திகழ்ந்தவர். மறைந்த எழுத்தாளர் கி.ரா. அவர்கள் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அவரது நினைவினைப் போற்றும் வகையிலும் அவரது படைப்பாளுமையை வெளிப்படுத்தும் வகையிலும் அவருடைய புகைப்படங்கள், படைப்புகள் ஆகியவற்றை மாணவர்களும் பொது மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஓர் அரங்கம் நிறுவப்படும்.கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த பிதாமகர் கி.ரா. அவர்களுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என்று  தெரிவித்துள்ளார்.

;