சென்னையில் பணியின் போது மின்சாரம் தாக்கியதில் 2 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புரவி புயலைத் தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மீனம்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பல இடங்களில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் அரக்கோணம் சாலை ஈஞ்சம்பாக்கத்தில் மின்வாரிய பணியின் போது விபத்து ஏற்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் பருத்தி குளத்தைச் சேர்ந்த மின்சார ஊழியர் பாக்கியநாதன் மற்றும் ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த தயாளன் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறது.